ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: நாக்-அவுட் சுற்றில் இந்தியா சாதனை….

Read Time:1 Minute, 45 Second

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் போட்செஸ்ட்ரூமில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 43.1 ஓவர்களில் 172 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், திவ்யனாஷ் சக்சேனா ஆகியோர் அதிரடி காட்டினர்.

35.2 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஜூனியர் உலக கோப்பை போட்டியில் நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் ஒரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். 4 முறை சாம்பியனான இந்திய அணி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. போர்செஸ்ட்ரூமில் நாளை நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.