இந்தியாவிற்கு எதிராக போரை தொடங்க வலியுறுத்தல்…!

Read Time:2 Minute, 23 Second

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பிப்ரவரி 10-க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக போரை தொடங்குமாறு பாகிஸ்தானில் உள்ள பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இம்ரான் கானை வலியுறுத்தி உள்ளனர்.

காஷ்மீர் மக்களை தூண்டிவிடுவதற்கான மற்றொரு முயற்சியாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்களன்று சில அரசியல் கட்சிகள் இந்தியாவுக்கு எதிராக ‘ஜிஹாத்’ கோரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிப்ரவரி 10-ஐ இந்தியாவுக்கு எதிரான போரின் தேதியாக அறிவிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்றத்தில் ஜாமியத் உலமா-இ-இஸ்லாம்-பாஸ்ல் உறுப்பினர்கள் இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் அறிவிக்க பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தினர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 10க்குப் பிறகு பாகிஸ்தான் இந்தியாவுடன் போரை தொடங்கும் என்று பிரதமர் இம்ரான் கான் அறிவிக்க வேண்டும் என்று அந்த கட்சியின் தலைவர் மவுனாலா அப்துல் அக்பர் சித்ராலி பரிந்துரைத்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான போர் அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க சர்வதேச சமூகத்தை கட்டாயப்படுத்தும் என்றும் கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக போர் நடத்த வேண்டும் என அவருடைய பேச்சை பல தலைவர்கள் நாடாளுமன்றத்தில் வரவேற்றுள்ளனர்.

“இந்தியாவை தாக்கி ஜம்மு-காஷ்மீரை கைப்பற்றுவதற்கு வேண்டிய செல்லும் திட்டத்தை கொண்டு வாருங்கள்” என பலர் வலியுறுத்தி உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான போர் கோரிக்கைக்கு பிரதமர் இம்ரான் கான் இன்னும் பதிலளிக்கவில்லை.