தமிழகத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் பறிமுதல்…

Read Time:4 Minute, 21 Second
Page Visited: 145
தமிழகத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் பறிமுதல்…

புதுக்கோட்டை அருகே கீரனூரில் விற்பதற்காக வைத்திருந்த சிவன், அம்மன், விநாயகர் உள்ளிட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 5 பஞ்சலோக சாமி சிலைகளை சிறப்பு படை பறிமுதல் செய்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.அபய்குமார் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் பஞ்சலோக விநாயகர் சிலையை ரூ.6 கோடிக்கு விற்க முயற்சிகள் நடப்பதாக சிறப்பு புலனாய்வு குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் உத்தரவின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு மேற்பார்வையில் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மாறுவேடத்தில் சென்ற தனிப்படையினர் புதுக்கோட்டை கீரனூர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள கொளத்தூர் என்ற பகுதியில் கல்குவாரி கற்களை விற்கும் வேலை செய்து வரும் கீரனூரை சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 29), தொடையூரை சேர்ந்த மதியழகன் (37) ஆகியோரை சந்தித்தனர். அவர்களிடம் 20 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலையை ரூ.3½ கோடிக்கு பேரம் பேசினார்கள்.

இதைத்தொடர்ந்து, சிலையை பார்க்க ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த அரவிந்த் (24), லால்குடியை சேர்ந்த குமார் (29) ஆகியோர் தனிப்படை போலீசாரை சிலை மறைத்து வைத்திருக்கும் இடத்திற்கு கூட்டிச்சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது, மேலும் 4 சிலைகள் இருந்தன. அதில், 51 கிலோ எடைகொண்ட சிவன் சிலை, 21 கிலோ எடையுள்ள பார்வதி அம்மன் சிலை, 46 கிலோ எடையுள்ள சிவகாமி அம்மன் சிலை, 26 கிலோ எடைகொண்ட மாணிக்கவாசகர் சிலை மற்றும் 8 கிலோ எடை கொண்ட பஞ்சலோக பீடம் இருந்தது தெரியவந்தது.

இந்த பஞ்சலோக சிலைகளை ரூ.20 கோடிக்கு விற்கவும் திட்டமிட்டு இருந்ததை கண்டுபிடித்து அதை மீட்டனர். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகன், வெள்ளைச்சாமி, அரவிந்த் மற்றும் குமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட சிவகாமி சிலை அரியலூர் கூவாகம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. மேலும், பஞ்சலோக சிவன், பார்வதி, சிவகாமி அம்மன், விநாயகர், மாணிக்கவாசகர் ஆகிய 5 சிலைகளும் 13-ம் நூற்றாண்டு சோழர் கால சிலையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இந்த சிலைகளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.20 கோடி அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சிலைகள் எந்த கோவில்களில் திருடப்பட்டது என்பது குறித்து எதாவது புகார்கள் உள்ளதா? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %