கொரோனா வைரஸ்: எச்சரிக்கை விடுத்த மருத்துவர் உயிரிழப்பு… குற்றவாளியான சீன அரசு…!

Read Time:1 Minute, 57 Second

கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை முதலில் கண்டறிந்த சீன மருத்துவர், நோயின் தாக்கம் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து உகான் நகரின் சீன மருத்துவரான லீ வெண்லியாங் கடந்த டிசம்பர் மாதமே எச்சரித்து உள்ளார். அதிகமானோர் காய்ச்சல் பாதிப்பால் தன்னை அனுகியதால், இது வழக்கத்திற்கு மாறாக உள்ளது சார்ஸ் போன்ற வைரஸ் தாக்கியிருக்கலாம் என எச்சரிக்கையை விடுத்தார். இதுதொடர்பான தகவலை தன்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். தொற்றுநோய் போல் பரவும் என்பதால், சக மருத்துவ நண்பர்களை எச்சரிக்கும் விதமாக கருத்துக்களை ‘வி சாட்டில்’ தெரிவித்தார்.

ஆனால் சீனாவை சேர்ந்த பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போதும் மருத்துவர் லீ வெண்லியாங் பாதிப்புக்குள் சிக்கினார். அவருக்கும் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஜனவரி 20-ம் தேதிதான் சீன அரசாங்கம் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அதன்பின்னர், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர் லீயை தொடர்புகொண்டு மன்னிப்பு கோரினர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விவகாரத்தில் சீன அரசுதான் குற்றவாளி என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.