இந்துக்கள் அகதிகள், இஸ்லாமியர்கள் குடியேறியவர்கள்… நேருவை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசியது என்ன?

Read Time:3 Minute, 32 Second

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேசிய பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் நேரு, அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கோபிநாத் பார்தோலிக்கு (Gopinath Bardoloi.) எழுதிய கடிதத்தை மேற்கொள் காட்டி பேசினார்.

பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களிடையே “இந்து அகதிகள் மற்றும் முஸ்லீம் குடியேறியவர்கள்” இடையே ஜவஹர்லால் நேரு ஒரு தெளிவான வேறுபாட்டை காட்டினார் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் உள்ள மத சிறுபான்மையினரைப் பாதுகாக்கக் கோரிய 1950-ம் ஆண்டை நேரு-லியாகத் ஒப்பந்தத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டும் பிரதமர் மோடி பேசினார். பாகிஸ்தானின் சிறுபான்மையினரை பற்றிதான் நேரு பேசினாரா? என்பது போன்ற கேள்விகளை காங்கிரஸ் எழுப்பியது.

பிரதமர் மோடி பேசுகையில், பிரிவினையின் போது மத துன்புறுத்தல்களிலிருந்து தப்பிப்பதற்காக எல்லையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு மக்கள் குடிபெயர்ந்த போது, சொந்த பூமி உணர்வு காரணமாக பாகிஸ்தானில் மீண்டும் தங்க முடிவு செய்த சுதந்திரப் போராட்டத்தை சேர்ந்த இரு தலைவர்களான பூபேந்திர குமார் தத்தா மற்றும் ஜோகேந்திர நாத் மண்டல் ஆகியோருக்கு அந்நாட்டில் நேர்ந்ததை உதாரணமாக மேற்கோள் காட்டினார்.

பூபேந்திர குமார் தத்தா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். சிறுபான்மை சமூகமான இந்துக்கள் பாகிஸ்தானில் கலைக்கப்படுவதாக தெரிவித்தார். பின்னர் அவர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து இங்கு இறந்தார். ஜோகேந்திர நாத் மண்டல் பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக இருந்தார். ஆனால் பாகிஸ்தானில் இந்துக்கள் மீது அழுத்தம் மற்றும் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டு முறையான இன அழிப்பு மேற்கொள்ளப்படுகிறது என புகார் தெரிவித்தார் என பிரதமர் மோடி பேசினார்.

பாகிஸ்தானில் இருந்து வரும் சிறுபான்மை சமூக மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் நேரு மக்களவையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்று மேற்கோள்காட்டினார் பிரதமர் மோடி. “இந்தியாவில் குடியேறவந்த பாதிக்கப்பட்ட மக்கள் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பொருத்தமான சட்டம் இல்லை என்றால், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்” என்று நேரு நவம்பர் 5, 1950 அன்று நாடாளுமன்றத்தில் பேசியதை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.