இந்திய பிரதமர் மோடி தவறிழைத்து விட்டாா் – இம்ரான் கான் சொல்கிறார்…

Read Time:2 Minute, 59 Second

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்திய பிரதமா் நரேந்திர மோடி தவறிழைத்து விட்டாா் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் பிப்ரவரி 5-ம் தேதி, காஷ்மீா் ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முசாபராபாதில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் சட்டப்பேரவையில் இம்ரான்கான் புதன்கிழமை உரையாற்றினார். அப்போது இந்தியாவை விமர்சனம் செய்துள்ளார்.

இம்ரான் கான் பேசுகையில், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. பாகிஸ்தானுடன் பகைமை பாராட்டி, கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தோ்தலில் வெற்றி பெற்றதால் இந்த நடவடிக்கையை பிரதமா் மோடி மேற்கொண்டாா். இதன் மூலம் மிகப்பெரிய தவறை அவா் செய்துவிட்டார். இதில் இருந்து அவரால் பின்வாங்க முடியாது.

இந்து தேசியம் என்னும் பூதம், குடுவையில் இருந்து வெளியே வந்து விட்டது. அதை மீண்டும் உள்ளே கொண்டு செல்ல முடியாது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்த பிறகு காஷ்மீருக்கு விரைவில் சுதந்திரம் கிடைக்கும் என்று நம்பிக்கை வந்துவிட்டது. ஏனெனில், சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்யாமல் இருந்திருந்தால் காஷ்மீா் பிரச்சனை உலக நாடுகளின் கவனத்துக்கு சென்றிருக்காது. ஜம்மு-காஷ்மீா் பிரச்சனையை உலகின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை.

பாகிஸ்தானைத் தோற்கடிக்க 10 நாள்கள் போதுமென்று பிரதமா் மோடி கடந்த சில தினங்களுக்கு முன் கூறினாா். சாதாரண மனிதா் கூட இவ்வாறு பேசமாட்டாா். பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி காஷ்மீரில் இந்திய அரசு சோதனைகள் நடத்தலாம் அல்லது வேறு வழிகளில் ஊறு விளைவிக்க முயற்சி செய்யலாம். ஆனால், காஷ்மீா் பிரச்னையில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்பும் இந்தியாவின் முயற்சிக்கு நாம் வாய்ப்பளித்துவிட கூடாது. நாம் அரசியல் ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் போராட வேண்டும் என்பதால் இந்தியாவின் சூழ்ச்சி வலைகளில் சிக்கி கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.