நிறைய டியூப் லைட்டுகள் இப்படித்தான்… ராகுல் காந்தியை கிண்டல் செய்த பிரதமர் மோடி

Read Time:3 Minute, 15 Second

மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, நிறைய டியூப் லைட்டுகள் இப்படித்தான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியை மறைமுகமாக கிண்டல் செய்து பேசினார்.

டெல்லியில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் காந்தி பேசுகையில், ‘பொறுத்திருந்து கவனியுங்கள். தற்போது நிறைய உரைகளை கொடுத்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி, இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. இந்திய இளைஞர்கள் அவரை கம்பால் அடிப்பார்கள். இளைஞர்களுக்கு சரியான வேலை அளிக்காவிட்டால், இந்தியா முன்னேற முடியாது என்பதை மோடிக்கு அவர்கள் புரிய வைப்பார்கள்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி இதற்கு பதிலடியை கொடுத்துள்ளார். மக்களவையில் குடியரசுத்தலைவர் உரை மீதான விவாதத்தின் போது பிரதமர் மோடி பேசுகையில், இந்த 70 வருடங்களில், தன்னிறைவான எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் கிடையாது. நான் ஒரு தலைவரின் பேச்சை கேட்க நேர்ந்தது. அதில் அவர் இன்னும் ஆறு மாதங்களில் மோடியை கம்பை கொண்டு தாக்குவேன் என்று பேசுகிறார்.

அது ரொம்ப கடினமான காரியமாக இருப்பதால் தான் ஆறு மாதங்கள் ஆகிறது என்று நினைக்கிறன். இருந்தாலும் இந்த ஆறு மாதங்களில் அதிகமான சூரிய நமஸகாரங்கள் செய்து நான் என்னை அதற்காக தயார் படுத்திக் கொள்வேன். கடந்த இருபது வருடங்களாக என் மீது தொடர்ந்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளின் காரணமாக, நான் அவதூறு மற்றும் கம்புத் தாக்குதல் ஆகியவற்றால் பாதிக்கப்படாத நிலைக்கு சென்று விட்டேன். இருந்தாலும் முன்கூட்டியே தகவல் கூறியதற்கு நன்றி என்றார்.

சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்த மோடியின் பேச்சிற்கு ராகுல் காந்தி எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க முயற்சி செய்தார். அப்போது பிரதமர் மோடி,

‘நான் 30 முதல் 40 நிமிடங்களாக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் மின்சாரம் பாய்ந்துள்ளது; நிறைய ட்யூப் லைட்டுகள் இப்படித்தான் இருக்கிறது’ என்று மறைமுகமாக ராகுலை கிண்டல் செய்தார்.

பின்னர் இதுதொடர்பாக ராகுல் காந்தி பேசுகையில், ‘நாட்டின் இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை வேலையில்லாத திண்டாட்டம் ஆனால், இருப்பினும், அதுகுறித்து சொல்வதற்கு மோடிக்கு எதுவும் இல்லை. நமது பிரதமரின் பாணியே திசை திருப்புதல்தான்’ என்று கருத்து தெரிவித்து உள்ளார்.