இனி சிகப்பழகு ‘க்ரீம்’ விளம்பரங்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்… 5 ஆண்டுகள் சிறை…!

Read Time:3 Minute, 25 Second

சிகப்பழகு க்ரீம் விளம்பரங்களுக்கு ரூ.50 லட்சம் அபராதமும், 5 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த க்ரீமை பயன்படுத்தினால் வெள்ளையான அல்லது சிகப்பான சருமம் பெறலாம் என்பது போன்று பல விளம்பரங்கள் வெளியாகிறது. மேலும் பாலுறவுத் திறனை வலுவாக்கும், தூண்டும் என்பது போன்ற மாத்திரை மருந்துக்கள் விளம்பரங்களும் அதிகமாக உலாவுகிறது. இதுபோன்ற விளம்பரங்களுக்கு கடிவாளமிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதவிர திக்குவாயை குணப்படுத்தும் மருந்துகள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்குதல், முதுமையை கட்டுப்படுத்துதல், இளநரையை கட்டுப்படுத்துதல் என்பன உள்ளிட்ட 78 வகையான நோய்களை குணப்படுத்தலாம் என்று தவறான தகவலை குறிப்பிட்டு விளம்பரங்கள் செய்யத் தடை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது முதல் முறையாக தவறு செய்பவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனையோ அல்லது அதனுடன் கூடிய அபராதமோ விதிக்கப்படும். மீண்டும் தவறினால், ஓராண்டு சிறையும், அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

முதல் முறை ரூ.10 லட்சம் அபராதமும், இரண்டாம் முறை ரூ.50 லட்சம் அபராதமும் வசூலிக்கலாம் என சட்ட மசோதாவில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சட்டத் திருத்த முடிவு மாறி வரும் கால சூழலையும் தொழில்நுட்பத்தையும் கருத்தில் கொண்டு எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான கருத்துகள், பரிந்துரைகள், எதிர்க்கருத்துகளை பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தாரிடமிருந்து வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3-ம் தேதி இது தொடர்பான அறிவிக்கை வெளியாகி உள்ளது. அதிலிருந்து 45 நாட்களுக்குள் கருத்துகள் வரவேற்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், காட்சி ஊடகத்தில் மட்டுமல்லாது, அச்சு, இணையதளம், பேனர், போஸ்டர், துண்டுப் பிரசுரம், லேபிள், ஒலிப்பெருக்கி, ரேடியோ என எந்த விதத்திலும் இவற்றை விளம்பரப்படுத்த கூடாது என்று சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %