கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்த இந்தியர்…

Read Time:3 Minute, 14 Second

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அங்கு அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

வைரசால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், புதியதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த வைரஸ் பாதிப்பிற்கு இதுவரையில் எந்தஒரு எதிர்ப்பு மருந்தும் கிடையாது. முகக்கவசம் அணிதல் மட்டுமே தடுப்பு நடவடிக்கையாக உள்ளது. இதற்கிடையே மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்திய விஞ்ஞானிகளும் இதற்கான பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்திய ஒருவர் மருந்து கண்டுபிடித்துள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎஸ்ஐஆர்ஓ) இந்திய வம்சா வளியை சேர்ந்த விஞ்ஞானி எஸ்.எஸ். வாசன் பணியாற்றி வருகிறார்.

அவரும் அவரது குழுவினரும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து சிஎஸ்ஐஆர்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது ஆய்வகத்தில் கொரோனா வைரஸை வளர்த்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம். அந்த வைரசுக்கு மருந்தும் கண்டுபிடித்துள்ளோம். இப்போது ஆராய்ச்சியின் ஆரம்ப நிலையில் உள்ளோம். அடுத்த 16 வாரங்களுக்குள் மனிதர்களுக்கு மருந்தை அளித்து சோதனை செய்வோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளி விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் இதுகுறித்து பேசுகையில், “குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ஐஐஎஸ்சி முன்னாள் மாணவரான எஸ்.எஸ்.வாசன், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஆப்பிரிக்காவை அச்சுறுத்திய எபோலா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச அளவில் இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.