தைப்பூச திருநாள்… கவலைகளை அகற்றுவான் திருச்செந்தூர் முருகப்பெருமான்…

Read Time:8 Minute, 39 Second

தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாளையே, ‘தைப்பூச’மாக நாம் கொண்டாடுகிறோம்.

சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும், பழனி மலையில் தைப்பூசத்திருவிழா வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே, முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வைத்து வதம் செய்து தேவர்களுக்கு மன நிம்மதியை வழங்கினார். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம் ஆகும். கந்த பெருமான் நம்முடைய கவலைகளை எல்லாம் அகற்றுவான்.

இந்நாளில் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் ஒன்றாகத் திகழும் இந்த ஆலயத்தைப் பற்றிய விஷயங்களை இங்கே பார்க்கலாம். தமிழகத்தின் தென்கோடியில் கடலாடும் கரையோரம் இருக்கிறது திருச்செந்தூர் திருத்தலம்.

> கோவில் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், ‘அலைவாய்’ என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.

> தமிழகத்தில் முதன் முதலில் நாகரிகம் தோன்றிய நகரங்களுள், திருச்செந்தூரும் ஒன்று.

> முருகப்பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் ‘அய்யனார்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள்.

> திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

> இந்த ஆலயத்துக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப்பெருமானை வணங்கிச் செல்ல வேண்டும்.

> திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக் கிறார்கள்.

> திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் வீரவாகுதேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு ‘வீரவாகு பட்டினம்’ என்றும் ஒரு பெயர் உண்டு.

> திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே, மூலவரான முருகப்பெருமானுக்கு பூஜை நடத்தப்படுகிறது.

> மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

> மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை ஒன்று உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால், முருகப்பெருமான் பூஜித்த பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்யலாம். இந்த அறைக்கு ‘பாம்பறை’ என்றும் ஒரு பெயர் உண்டு.

> திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால், குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

> திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை ‘மாப்பிள்ளை சுவாமி’ என்று அழைக்கிறார்கள்.

> திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.

> திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

> திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் ‘மணியடி’ எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

> திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்கி நிற்கின்றன.

> ‘திருச்செந்தூர் முருகனே போற்றி’ என்ற தலைப்பில் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

> மூலவருக்கு, பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

> நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் இருக்கும் வற்றாத நீரூற்றாகும். இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

> முருகப்பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் ‘அய்யனார்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள்.

> திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

> திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

> திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில், விசுவரூப தரிசனம் என்னும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

> திருச்செந்தூர் முருகப்பெருமான், தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

> இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகார தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.

> திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஒலிக்கப்படும் மணிஓசைக்கு பிறகே, வீரபாண்டிய கட்டபொம்மன் உணவருந்துவார் என்று ஒரு செய்தி உண்டு. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட பிரமாண்ட மணி, தற்போது ராஜகோபுரத்தின் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

> சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, முருகப்பெருமான் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில், இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது.

> திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணி திருவிழாவின்போது, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

> திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு. ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு ‘கங்கை பூஜை’ என்று பெயர்.