பவுடா் பயன்பாட்டால் புற்றுநோய்… ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ.5,000 கோடி இழப்பீடு அளிக்க உத்தரவு

Read Time:1 Minute, 58 Second

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பான பேபி பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு சுமாா் ரூ.5,365 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் நியூஜொ்ஸி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் சுமாா் ரூ.264 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று தீா்ப்பு வெளியாகியிருந்தது. ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய அஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதாக 16,000-க்கும் அதிகமான புகாா் மனுக்கள் அந்த நிறுவனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எனினும், புற்றுநோய்க்கு தங்கள் நிறுவனத்தின் பவுடரை பயன்படுத்தியது காரணமாக இருக்காது என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன்ம் மறுத்துள்ளது.

பல நாடுகளில் நடத்திய பரிசோதனைகளில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் எந்த அம்சமும் தங்கள் பவுடரில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே, நியூஜொ்சி நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பத்தாண்டுகளுக்கு மேலாக அஸ்பெஸ்டாஸ் தங்கள் நிறுவன பேபி பவுடரில் கலந்திருப்பதை தெரியப்படுத்தாமல் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மறைத்துவிட்டது என்று ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் 14-ஆம் தேதி செய்தி வெளியிட்டது. இதை தொடா்ந்து சா்ச்சை எழுந்தது.