பாகிஸ்தானில் 14 வயது சிறுமி மதமாற்றம் செய்யப்பட்டு கட்டாய திருமணம் செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு

Read Time:3 Minute, 26 Second

பாகிஸ்தானில் 14 வயது கிறிஸ்துவ சிறுமி கடத்தி மதமாற்றம் செய்யப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதை அந்த நாட்டு உயா்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

இஸ்லாமிய ஷரியா சட்டப்படி, அந்தத் திருமணம் செல்லும் என்று நீதிமன்றம் விளக்கமளித்து உள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தை சேர்ந்தவர் யூனுஸ், நஹினா மஷி. இவர்களின் மகள் ஹுமா(14). கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்துல் ஜப்பார் என்பவர் ஹுமாவை கடத்திசென்று கட்டாய மதமாற்றம் செய்து, வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் சிந்து மாநில உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கைக் கடந்த 3-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் இக்பால் கல்ஹூரோ, இர்சத் அலி ஆகியோர் முஸ்லிம்கள் ஷரியத் சட்டப்பட்டி இந்த திருமணம் செல்லுபடியாகும் எனக் கூறி தீர்ப்பளித்து உள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுமாவுக்கு திருமண வயது வரவில்லை என்றாலும், அவருக்கு மாதவிடாய் பருவம் வருவதால் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்கீழ் அவரது திருமணம் செல்லும் என்று நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த வழக்கில் சிறுமியின் பெற்றோர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் தபாசும் யூசுப் பேசுகையில், இந்த திருமணம் கடந்த 2014-ம் ஆண்டு சிந்து மாநில குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்துக்கு விரோதமாக இருக்கிறது.

18-வயதுக்கு கீழ்பட்ட இந்து, கிறிஸ்தவ பெண்களைக் கட்டாயத் திருமணம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த சிறுமிக்கு முதல் மாதவிடாய் சுழற்ச்சி வந்ததால் அந்த திருமணம் செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சிறுமியின் வயதை ஆய்வு செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், போலீஸ் அப்துல் ஜப்பாருக்கு ஆதரவாக செயல்படுகிறது.

சிறுமியின் வயதை உறுதி செய்யும்வரை சிறுமியை கணவருடன் சேர்க்க கூடாது என கோரி உள்ளோம். ஆனால், போலீசார் பொய்யான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துவிடுவார்கள் என சிறுமியின் பெற்றோர் அச்சப்படுகின்றனர். இருப்பின் சிறுமியின் பெற்றோர் தேவாலயம், பள்ளி ஆகியவற்றில் வயது குறித்த சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம் ” என தெரிவித்து உள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மை சிறுமிகள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக திருமணம் செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது.