கொரோனா வைரஸ் பீதியால் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 160 இந்தியர்கள்….

Read Time:4 Minute, 33 Second

மத்திய சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகான். இது சீனாவின் 7-வது மிகப்பெரிய நகரமாகும். கடந்த டிசம்பரில் உகானில் கரோனா வைரஸ் பரவ தொடங்கியது.

உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பெரும் அச்சமாக எழுந்துள்ளதால் உலக நாடுகள் பெரும் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.

இந்நிலையில் ஹாங்காங்குக்கு சென்றுவிட்டு திரும்பிய ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்த ஹாங்காங் பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அந்த கப்பலை ஜப்பான் தனது நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் 1,045 ஊழியர்கள், 2,666 பயணிகள் என மொத்தம் 3711 பேருடன் ஜப்பானின் யோகோஹாமா கடற்பகுதியில் அந்த கப்பல் கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதில் கடைசியாக கிடைத்த தகவல்படி கப்பலில் இருந்த 64 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. கப்பலில் இருக்கும் மேற்கு வங்காள மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் ஹதிபா கிராமத்தை சேர்ந்த பினாய் குமார் சர்க்கார் என்பவர் இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் 1 நிமிடம் 46 வினாடிகள் ஒளிபரப்பாகும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இந்த கப்பலில் நாங்கள் 160 இந்தியர்கள் உள்ளோம். பல நாட்களாக இந்த கப்பல் தனிமைப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள பலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் எங்களின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதனால் எப்படியாவது இந்த சொகுசு கப்பலில் இருந்து வெளியேற எங்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்” என தெரிவித்து உள்ளார்.

சொகுசுக்கப்பலில் இருப்பவர்களுக்கு தெர்மாமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பதற்காக அளிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவக் குழுவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனடியாக கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இதுகுறித்து அந்த கப்பலில் பயணம் மேற்கொண்டுள்ள பயணி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “என் அறைக்கு அருகில் உள்ள வெளிநாட்டு பயணி, ஒருவர் கடுமையான இருமல் காரணமாக அவதிப்பட்டு உள்ளார். கப்பல் ஊழியர்கள் ஒவ்வொரு அறைக்கு வந்து உணவு கொடுத்து வருகிறார்கள். இன்றோ, நாளையோ நானும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவேன்” என அச்சம் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே கப்பலில் இருக்கும் யார்ட்லீ யாங் என்ற பெண் பயணி தன்னுடைய டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாங்கள் 5 நாள்களாக கப்பலில் இருக்கிறோம். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. தற்போது கப்பலில் ஏராளமான மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளனர். யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது அவர்களுக்கு தெரியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கப்பலில் குறிப்பிட்ட நேரம் வெளியில் செல்ல அனுமதிக்கின்றனர்.

ஜன்னல்கள் இல்லாத அறையில் தங்கியிருக்கும் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கப்பலில் இருக்கும் பயணிகளுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக, ஒரு தொலைபேசி எண்ணை அளித்துள்ளனர். அது ஒரு மனநல ஆலோசகரின் எண். உதவி தேவைப்பட்டால் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்” எனக் கூறி உள்ளார்.