சீனாவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 908 ஆக உயர்வு

Read Time:2 Minute, 24 Second

சீனாவில், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 811 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்து உள்ளனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரசினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதல் முதலில் டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, சீனாவின் 31 மாகாணங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. உலகம் முழுவதும் எச்சரிக்கையாக இருந்த நிலையில் உகான் நகரில் இருந்து திரும்பியவர்கள் மூலமாகவும் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தினசரி வெளியிட்டு வருகிறது. இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று பலியானோர் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 97 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 3 ஆயிரத்து 62 பேரை வைரஸ் தாக்கி உள்ளது. மொத்தத்தில், சீனா முழுவதும் 40 ஆயிரத்து 171 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 6 ஆயிரத்து 188 பேருக்கு நோய் முற்றி உள்ளது.

சீனாவில், கடந்த 2002-2003 ஆண்டுவாக்கில் ‘சார்ஸ்‘ என்ற வைரஸ் பரவியது. சீனா மற்றும் ஹாங்காங்கில் 700-க்கும் மேற்பட்டோரை பலி கொண்டது. ஆனால், அதை விட அதிகமானோரை கொரோனா வைரஸ் பலி கொண்டுள்ளது. சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்சில் ஒருவரும், ஹாங்காங்கில் ஒருவரும் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச குழு, இந்த வாரம் சீனாவுக்கு செல்கிறது.