கொரோனாவால் செத்துமடியும் சீன மக்கள்… உதவ தயார் என இந்திய அரசு அறிவிப்பு

Read Time:1 Minute, 45 Second

கொரோனோ வைரஸ் தாக்குதல் விவகாரத்தில் சீனாவுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி வருகிறது. அதற்கு பலியானோர் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் வைரஸ் பரவி உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை ஒடுக்குவதில் சீனாவுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரசால் சீனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிபருக்கும், சீன மக்களுக்கும் துணைநிற்க விரும்புகிறோம். இந்த சவாலை சமாளிக்க சீனாவுக்கு இந்தியா உதவ தயாராக இருக்கிறது. கொரோனா வைரசுக்கு பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கொரோனா வைரஸ் பரவலின் மையமாக திகழும் ஹுபெய் மாகாணத்தில் இருந்து 650 இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தற்காக அதிபர் ஜின்பிங்குக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.