இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் நோயாளி நலமடைந்தார்… மீண்டும் ரத்த பரிசோதனை…

Read Time:2 Minute, 8 Second

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி நலமடைந்தார் என்ற நற்செய்தி கேரளாவிலிருந்து வெளியாகி உள்ளது.

சீனாவின் உகான் நகரிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் ஜனவரி 30-ம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை காரணமாக மாணவி உடல்நலம் தேறினார்.

உடல்நலமானதை அடுத்து அவருடைய ரத்த மாதிரிகள் கேரளாவில் உள்ள பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு தற்போது இல்லையென, அதாவது நெகட்டிவ் (negative) என தெரியவந்தது. இருப்பினும், மீண்டும் பரிசோதனையை மேற்கொள்ள புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மூவரும் கேரளாவை சேர்ந்தவர்கள், அவர்கள் சீனாவின் உகான் நகரில் மருத்துவம் படிப்பவர்கள். இதற்கிடையே இரண்டாவதாக வைரஸ் பாதிப்பு இருப்பதாக காணப்பட்ட மாணவர் ஆலப்புழா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய ரத்த மாதிரிகள் கேரளாவில் பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது. இருப்பினும் ரத்த மாதிரிகள் புனே பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மூன்றாவது நபருக்கு காசர்கோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.