இந்தியாவின் மீது பாகிஸ்தான் பொருளாதார தாக்குதல்…!

Read Time:4 Minute, 50 Second

இந்தியாவிற்கு எதிராக என்னென்ன வேலையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் சட்டவிரோதமாக பாகிஸ்தான் தொடர்ச்சியாக செய்கிறது.

இந்தியாவிற்கு எதிராக போரை மேற்கொள்ள பயங்கரவாதிகளை வளர்த்து மறைமுகமாக போரிட்டு அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்கிறது. இதற்கிடையே போலி இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் வெளியிட்டு வருகிறது. பழைய ரூபாய் நோட்டுக்களில்தான் இந்த சிக்கல்கள் நிலவியது என்று பார்த்தாலும், பாகிஸ்தான் புதிய கள்ளநோட்டுக்களை ஒரிஜினல் போன்று அச்சடித்து வெளியிட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக போலி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வெளியிட்டு வருகிறது. இதன்மூலம் பயங்கரவாதிகளை செழிக்கச்செய்கிறது.

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் துபாய் வழியாக இந்தியாவில் புழக்கத்தில் விடவந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. துபாயிலிருந்து மும்பை வந்த விமான பயணியிடம் நடத்திய சோதனையில் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், அந்த பயணி கொண்டு வந்த கள்ள ரூபாய் நோட்டுகளில், உண்மையான நோட்டில் இருக்கும் 9 பாதுகாப்பு அம்சத்தில் 7 அம்சங்கள் சரியாக இருந்ததுதான்.

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு, துபாய் வழியாக இந்த கள்ள ரூபாய் நோட்டுகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக, கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரிசர்வ் வங்கி வெளியிட்ட உயர் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் அதிக பாதுகாப்பு நிறைந்தவை என்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் 2019-ம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ஆர்பிஐ நிறுத்திவிட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு, அதிகப்படியான 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை கண்டுபிடித்ததே அதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், துபாயில் இருந்து மும்பை வந்த பயணியிடம் இருந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. பொதுமக்களால், இந்த ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டு என்பதை கண்டுபிடிக்கவே முடியாத வகையில் இது இருந்ததாகவும், முன்கூட்டியே கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

சூட்கேஸ் போன்ற பையில், துணிக்கும், பையின் தடிமனான பகுதிக்கும் இடையில் இருக்கும் குஷனில் இந்த ரூபாய் நோட்டுகள் மறைத்து கொண்டு வரப்பட்டது. பொதுவாக நோட்டுகள் கட்டுகளாக இருந்தால் மட்டுமே ஸ்கேனரால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இந்த கள்ள நோட்டுகள் ஆங்காங்கே சிதறியபடி கொண்டுவரப்பட்டதால் கண்டறிய முடியாமல் போனதாகவும். ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகே கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த கள்ள நோட்டில் 9 பாதுகாப்பு அம்சங்களில் இரண்டே இரண்டு மட்டுமே சரியாக இல்லை. ஒன்று, ஆப்டிகலி வேரியபிள் இங் – இந்த மையினால் பிரிண்ட் செய்யப்படும் வார்த்தையை பல்வேறு கோணங்களில் பார்க்கும் போது பல்வேறு வர்ணங்களில் தெரியும். இரண்டாவது, சீ த்ரோ ரெஜிஸ்டர் – இதில் ரூபாய் நோட்டை விளக்கு வெளிச்சத்தில் காட்டும் போதுதான் அதில் மறைந்திருக்கும் புகைப்படம் வெளியே தெரியும். இவ்விரண்டும் சரியாக இல்லாதது மட்டுமே, இது கள்ள நோட்டு என்று கண்டறிய உதவியதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.