கிண்டல் செய்த வங்கதேச வீரர்கள்… இந்திய வீரர்கள் எதிர்ப்பு… மைதானத்தில் சண்டையிட்ட வீடியோ…!

Read Time:2 Minute, 10 Second

16 அணிகள் பங்கேற்ற 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வந்தது.

இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதியது. இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி, நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கோப்பையை வசப்படுத்தி சாதனை படைத்தது. வங்காளதேச அணி உலக அளவிலான போட்டிகளில் வென்ற முதல் மகுடம் இது தான். இந்த வெற்றியை அந்த நாட்டு ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தோல்வியே சந்திக்காமல் கம்பீரமாக இறுதிசுற்றை அடைந்த 4 முறை சாம்பியனான இந்திய அணி, கடைசி நேரத்தில் கோட்டைவிட்டது. வங்காளதேச கேப்டன் அக்பர் அலி ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் ஜெய்ஸ்வால் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

போட்டி முடிந்ததும் மைதானத்தில் மோதல் வெடித்தது. வெற்றியை கொண்டாட மைதானத்திற்குள் திரண்ட வங்காளதேச அணிவீரர்கள் இந்திய வீரர்களை நோக்கி மோசமாக கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருதரப்பு இடையேயும் கடுமையான வாக்குவாதம் நேரிட்டது. இருதரப்பு வீரர்களும் மோதிக்கொண்டனர். ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு நிலைமை மோசமானதும் நடுவர்கள் உள்ளே நுழைந்து கட்டுப்படுத்த முயன்றனர். பின்னர் எச்சரித்து அனைவரையும் வெளியேற்றினர்.

இந்த விளையாட்டில் நடந்த மோதல் சம்பவம் மிகவும் அவமானகரமானது என பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.