புர்காவுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்… பா.ஜனதா தலைவர் வலியுறுத்தல்

Read Time:3 Minute, 7 Second

இந்தியாவில் புர்காவுக்கு தடை விதிக்க வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில பா.ஜனதா தலைவரும், அமைச்சருமான ரகுராஜ்சிங் வலியுறுத்தி உள்ளார்.

பா.ஜனதா தரப்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அலிகாரில் இதுபோன்ற கூட்டத்தில் அம்மாநில பா.ஜனதா தலைவர் ரகுராஜ்சிங் பேசினார்.

அவர் பேசுகையில், “இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த வருடம் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பல உயிர்கள் பலியானதே காரணமாகும். இதனால், இந்தியாவிலும் புர்காவிற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இதனால் தீவிரவாதம் ஒடுக்கப்படும்.

தீவிரவாதிகள் நம் நாட்டில் நுழைவதற்கு புர்கா வசதியாக உள்ளது. புர்கா அணிந்து சாலைகளில் நடந்தால் அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது.

இதுபோக, சிசிடிவி கேமராக்களிலும் அவர்கள் முகம் தெரியாது. டெல்லியின் ஷாஹீன்பாக்கில் நடைபெற்றும் போராட்டத்தில் கலந்துகொள்ளும் பெண்கள் புர்கா அணிந்து உள்ளனர். இவர்களுடன் தீவிரவாதிகளும் புர்கா அணிந்து ஊடுருவி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே புர்காவை இந்தியாவில் அணிய தடை விதிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக நான் நேற்று கலந்துகொண்ட பிராமண மகாசபாவில் பேசி உள்ளேன். இந்த புர்காவானது அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கலாச்சாரம் ஆகும். இதற்கு தீர்த்த யுகத்தில் நல்ல உதாரணம் உள்ளது.

அதில், வாழ்ந்த ராமரின் சகோதரர் லக்‌ஷ்மணர் முன் சூர்ப்பனகை தோன்றினார். அவரது மூக்கை லக்‌ஷ்மணர் வெட்டி அனுப்பிவிட்டார். இதனால்,

அவமானப்பட்ட சூர்ப்பனகை அரேபியாவிற்கு சென்று மறைந்து வாழ்ந்து வந்தார். அப்போது தனது கண்களை மட்டும் வெளியில் காட்டி முகத்தை மறைத்து கொண்டார். இங்கிருந்து புர்கா அணியும் வழக்கம் உருவானது.

புர்கா தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் மற்றும் பயங்கரவாதத்தை நசுக்க இதற்கு தடை விதிக்க வேண்டும். இலங்கை, சீனா, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் புர்கா அணிவது கிடையாது.

பயங்கரவாதிகள் இதைப்பயன்படுத்தி கொள்ள முடியும் என்பதால் மத்தியில் பிரதமர் மோடியும், உ.பி.யில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியும் இருப்பதால் புர்கா அணியத் தடை செய்ய வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.