டெல்லி சட்டசபைத் தேர்தல்: காங்கிரஸ் 67 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு…!

Read Time:1 Minute, 57 Second

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பழைமையான காங்கிரஸ் கட்சியை மக்கள் மீண்டும் நிராகரித்து உள்ளனர். ஷீலா தீட்சித்துக்கு 15 ஆண்டுகள் ஆட்சிசெய்ய வாய்ப்பு கொடுத்த மக்கள், இப்போது காங்கிரசை நிகாரித்து வருகிறார்கள்.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 63 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது மட்டுமில்லாது 67 தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்து உள்ளது.

ஒரு தொகுதியில் பதிவான மொத்தவாக்குகளில் ஆறில் ஒரு பங்கை பெற தவறினால் ஒரு வேட்பாளர் தனது டெபாசிட்டை இழப்பார். சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன் ரூ .10,000 தேர்தல் ஆணையத்திற்கு டெபாசிட் செய்கிறார்கள். அவர்கள் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெற தவறினால், அவர்களின் டெபாசிட் திரும்ப வழங்கப்படாது. காந்தி நகர், பத்லி மற்றும் கஸ்தூர்பா நகர் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே டெபாசிட் தொகையை காங்கிரஸ் காப்பாற்றியுள்ளது. 2015-ம் ஆண்டில் ஆம் ஆத்மி சார்பில் சாந்தினி சவுக் தொகுதியில் வெற்றிப்பெற்ற அல்கா லம்பா, இம்முறை காங்கிரஸ் கட்சியிலிருந்து போட்டியிட்டு படுதோல்வியை தழுவினார். அவருக்கும் டெபாசிட் கிடைக்கவில்லை.

டெபாசிட் இழப்பு என்ற அவமானம் இருந்தபோதிலும், காங்கிரஸ் தலைவர்கள் முடிவுகளால் மகிழ்ச்சியடைவதாக தெரிகிறது, முக்கியமாக பாஜக தோற்றதால் அவர்கள் மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள்.