டெல்லியில் இரண்டாவது முறையாக காங்கிரஸ் படுதோல்வி… குஷ்பு விரக்தி

Read Time:3 Minute, 28 Second

டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இதில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியினரே ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. இதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 63 தொகுதிகளை தன்வசப்படுத்துகிறது. பா.ஜனதா 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்று 5 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலிலும் அங்கு தோல்வியைதான் தழுவியிருந்தது. இம்முறையும் டெல்லியில் படுதோல்வியை தழுவியுள்ளது. ஒரு தொகுதியில் கூட முன்னிலையைகூட அக்கட்சியால் முடியவில்லை. மேலும் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலில் இருந்து பாதியாக குறைந்து உள்ளது. மொத்த வாக்கையும் ஆம் ஆத்மியும், பா.ஜனதாவும் விழுங்கிவிட்டது. ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தாலும், ஒருபுறம் வருத்தமாகதான் உள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு விரக்தியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.


குஷ்பு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லியில் காங்கிரசுக்காக எந்த மாயாஜாலத்தையும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் நசுக்கப்பட்டுவிட்டது. நாம் போதுமானதை செய்கிறோமா, நாம் சரியானதை செய்கிறோமா, நாம் சரியான பாதையில் இருக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்றே பெரிதாக பதில் வரும். நாம் இப்போதே பணியை தொடங்க வேண்டும். இப்போது இல்லையென்றால் எப்போதும் முடியாது.


அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை விஷயங்களை சரி செய்ய வேண்டும். ஆனால் மக்கள் வெறுப்பு விஷம் நிரம்பிய ஆபத்தான மோடியின் அராஜக கும்பலை நிராகரித்துள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.


இந்த பதிவுக்கு ஒருவர் பதில் டுவிட் இடுகையில், “அரசியல் என்பது 24/7 வியாபாரம். உங்கள் கட்சியிடம் போதிய ஆக்ரோஷம், ஆவேசம், பார்வை எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார். அதற்கு குஷ்பு “ஏற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.