டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி… பா.ஜனதா எண்ணிக்கையில் முன்னேற்றம்…!

Read Time:1 Minute, 44 Second

டெல்லி மாநிலத்தின் 70 உறுப்பினர் சட்டசபைக்கு கடந்த 8-ம் தேதி தேர்தல் நடந்தது.

இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. மாநிலத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனைப்போட்டி ஏற்பட்டது. ஆனால், பிரசாரக்களம் பா.ஜனதா மற்றும் ஆம் ஆத்மி இடையில்தான் மோதல் என்பதை காட்டியது.

ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் கடுமையாக போராடின.

ஆனால் வாக்கு எண்ணிக்கையில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியே தம்ஸ் அப் காட்டியுள்ளது. மாநிலத்தில் மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஆகிறார். ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. பா.ஜனதா 8 தொகுதிகளில் முன்னிலைப் பெற்று உள்ளது. ஆட்சியமைக்க பெரும்பான்மை எண்ணிக்கையான 36 ஐ தாண்டி அமோக வெற்றியை ஆம் ஆத்மி பதிவு செய்து உள்ளது.

கடந்த தேர்தலுடன் ஒப்பிட்டால் 5 தொகுதிகளை ஆம் ஆத்மி பா.ஜனதாவிடம் இழப்பதாக தற்போதைய (3 மணி நிலவரம்) காட்டுகிறது. 2015 தேர்தலில் ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் வென்றிருந்தது. பா.ஜனதா 3 தொகுதிகளில் வென்றிருந்தது. காங்கிரஸ் கடந்த முறையைப்போன்று இம்முறையும் வாஷ் அவுட் ஆனது.