ஜப்பான் சொகுசு கப்பலில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Read Time:3 Minute, 30 Second

ஜப்பான் சொகுசு கப்பலில் இரண்டு இந்தியர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், ஜப்பானின் யோகோகாமா கடற்கரையில் டைமண்ட் சொகுசு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருக்கும் 3,711 பேரில் (2,666 பயணிகள் மற்றும் 1,045 பணியாளர்கள்), 132 பயணியாளர்கள் மற்றும் ஆறு பயணிகள் இந்தியர்கள். கொரோனா வைரஸ் தொற்று சந்தேகம் காரணமாக கப்பலை ஜப்பான் பிப்ரவரி 19-ந்தேதி வரை தனிமைப்படுத்தியுள்ளது. பிப்ரவரி 12 நிலவரப்படி கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இதில், இருவர் இந்திய பணியாளர்கள். ஜப்பானிய சுகாதாரத்துறை விவகாரங்கள் விதிகளின்படி 174 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் இறங்க அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் மோசமான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மேற்பார்வையின்கீழ் மருத்துவமனைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் சம்பந்தப்பட்ட ஜப்பானிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. கப்பலில் இருக்கும் இந்தியர்களின் உடல்நலனை உறுதி செய்வதற்கும், அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லையென்றாலும் கப்பலில் இருந்து இறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான நடவடிக்கையில் இந்திய தூதரகம் இறங்கி உள்ளது. தங்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதாக ஜப்பானிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இந்திய தூதரகம் இ-மெயில் மற்றும் தொலைபேசி வாயிலாக கப்பலில் உள்ள இந்தியர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளது. மேலும், ஜப்பானிய அதிகாரிகளின் விதிமுறைகள் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எந்தஒரு பாரபட்சமான நடவடிக்கை இருப்பதாக இந்தியர்கள் தரப்பில் எந்தஒரு புகாரும் தெரிவிக்கப்படவில்லை. இந்தியர்களை திருப்பி அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் தூதரகம் செயல்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹாங்காங்குக்கு சென்றுவிட்டு வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலை ஜப்பான் தனது பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. இக்கப்பல் நடுக்கடலில் நிறுத்தி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டது. கப்பலில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜப்பான் நடவடிக்கையை மேற்கொண்டது.