சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1113 ஆக அதிகரிப்பு

Read Time:2 Minute, 2 Second

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1113 ஆக அதிகரித்து உள்ளது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை தெரிவித்து உள்ளது. இதுவரை சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 1,113 பேர் இறந்து உள்ளனர்.

வைரஸ் தாக்குதல் உறுதியானவர்களின் எண்ணிக்கையும் 44,653 ஆக உயர்ந்துள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்ட 8,204 நோயாளிகள் மோசமான நிலையில் உள்ளனர். மேலும், 16,067 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 4.51 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் இன்னும் 1.85 லட்சம் பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த சீன அதிகாரிகளுக்கு உதவியாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழு சீனா சென்றுள்ளது. அவர்கள் சீன அதிகாரிகளுடன் இணைந்து தொற்றுநோய் பற்றிய புரிதலை அதிகப்படுத்தவும், உலகளவிலான உதவிகளில் ஈடுபடவும் பணியாற்றி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் சீன அதிகாரிகள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் அடங்கிய ஒரு கூட்டு நிபுணர்கள் குழுவை உருவாக்கி உள்ளது. அவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதல், தொற்றுநோய் ஆகியவற்றை மதிப்பிடுவது, கட்டுப்படுத்துவது ஆகியவை குறித்து ஆழமாக விவாதித்து வருகின்றனர்.