சிஏஏ எதிர்ப்பு போராட்டம் “அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம்” பிரியங்கா பேச்சு

Read Time:4 Minute, 14 Second
Page Visited: 64
சிஏஏ எதிர்ப்பு போராட்டம் “அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம்”  பிரியங்கா பேச்சு

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை. அதனால், நாடு முழுவதும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உ.பி.யில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போராட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து பேசிவருகிறார். அசாம்காருக்கு சென்று சிறையில் அடைக்கப்பட்ட சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் பில்ஹாரியாகஞ்ச் சென்ற பிரியங்கா காந்தி அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசினார்.

அவர் பேசுகையில், மத்திய மற்றும் உத்தரபிரதேச பா.ஜனதா அரசுகள் அரசியலமைப்பை அழிக்க முயற்சி செய்கின்றன. ஜனநாயகத்தில் குரல் எழுப்புவது குற்றம் அல்ல, மாறாக உரிமைக்காக போராடுபவர்களை நசுக்குவது மிகப்பெரிய அநீதி. அமைதியான போராட்டக்காரர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். நான் பிஜ்னோர், மீரட், முசாபர்நகர், லக்னோ மற்றும் வாரணாசி மற்றும் பிற இடங்களுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள கிராமப்புற பெண்களிடம் பேசினேன்.

மக்கள் கூறியவற்றை கொண்டு எங்கள் கட்சியால் ஒரு அறிக்கை தயார்செய்யப்பட்டு தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அசாம்கரில் நடந்த போராட்டத்தின்போது கொடுமை செய்த போலீஸ்காரர்களின் பெயர்களையும் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளோம். உங்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் அது மிகமிக தவறானது. நாம் அனைவரும் அநீதிக்கு எதிராக நிற்போம்.

உத்தரகண்டில் உள்ள பா.ஜனதா அரசாங்கம் இடஒதுக்கீடு ஒரு அரசியலமைப்பு உரிமை அல்ல என்று கூறுவதை இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள், ஒரு மாநில அரசு அரசியலமைப்பை அழிப்பது பற்றி பேசுகிறது. நீங்களும் நாங்களும் இணைந்து அதைக் காப்பாற்றவில்லை என்றால், அரசியலமைப்பு அழிக்கப்பட்டுவிடும். அரசியலமைப்பை மாற்றும் முயற்சிகளுக்கு எதிராக நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து எழ வேண்டும், ஏனென்றால் அவர்கள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள அனைத்து சட்டங்களும் ஒரு சமூகத்திற்கு எதிரானவை அல்ல, மாறாக முழு அரசியலமைப்பிற்கும் எதிரானது.

காங்கிரஸ் கட்சி இன்று உங்களுடன் நிற்கிறது, அது நாளை உங்களுக்கு ஆதரவாக நிற்கும், உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து உங்களுக்கு ஆதரவாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %