ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு விரைவில் வருகிறது எஸ்-400 அதிநவீன ஏவுகணை…

Read Time:2 Minute, 29 Second

சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டது.

எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை கொள்முதல் செய்வதற்கு அந்நாட்டுடன் மோடி அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையையும் மீறி 40,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு, இந்தியா வந்தடையும் காலம் வெகு தொலைவில் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு இது ஒரு வான் பரப்பு பாதுகாப்பு அமைப்பாகும்.

இந்தியாவுக்கு இத்தகைய ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மிகவும் அவசிய தேவையாகும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியது. ஆனாலும் இந்தியா அழுத்தத்துக்கு அடிபணியவில்லை. ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு எஸ்-400 அதிநவீன ஏவுகணை விரைவில் வருகிறது.

இந்தியாவுக்கான எஸ் -400 ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு உற்பத்தியை ரஷ்யா தொடங்குகிறது, அமெரிக்காவின் அழுத்தம் இருந்தபோதிலும் அனைத்து கடமைகளும் நிறைவேற்றப்படுகின்றன என ரஷ்யா தெரிவித்து உள்ளது. ஏவுகணை அமைப்பினை ஆபரேட்டர்கள் இயக்கும் வகையில், இந்தியாவில் ஏற்கனவே பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மந்துரோவ் தெரிவித்து உள்ளார் என ரஷ்யா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

முதல்கட்ட ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு இந்தியாவிடம் 2021-ம் ஆண்டின் இறுதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ரஷ்யாவின் இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டாட்சி சேவையின் துணைத் தலைவர் விளாடிமிர் ட்ரோஜ்ஜோவ் கூறியதாக மாஸ்கோ டைம்ஸ் தெரிவித்துள்ளது.