பிரதமருக்கு மட்டுமே கருப்பு பூனைப்படை பாதுகாப்பு – மத்திய அரசு தகவல்

Read Time:3 Minute, 14 Second
Page Visited: 75
பிரதமருக்கு மட்டுமே கருப்பு பூனைப்படை பாதுகாப்பு – மத்திய அரசு தகவல்

பிரதமருக்கு மட்டுமே கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களுக்கு விசேஷ பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) எனப்படும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளித்து வந்தது. சமீபத்தில், எஸ்.பி.ஜி. சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி, பிரதமர், அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் வசிக்கும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்க வகை செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமராக இருந்தால், அவர் பதவி விலகிய நாளில் இருந்து 5 ஆண்டுகள்வரை அவருக்கும், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். இதன் அடிப்படையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவருடைய மனைவி குர்சரண் கவுர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. அவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிப்ரவரி 11-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி, தற்போது ஒருவருக்கு (பிரதமர்) மட்டுமே எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், 56 முக்கிய பிரமுகர்களுக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து யாருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது, யாருக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது என்று துணைக்கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கிஷன் ரெட்டி பதில் அளிக்கையில், ஒருவருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவின் அடிப்படையில் மத்திய பாதுகாப்பு அமைப்புகள் பாதுகாப்பு அளிக்கின்றன. இந்த ஆய்வு அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் அடிப்படையில், பாதுகாப்பு நீட்டிக்கப்படுகிறது அல்லது மாற்றி அமைக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, தனிப்பட்ட நபர்களின் பாதுகாப்பு விவரங்களை வெளியிட முடியாது என்றார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %