டெல்லி தேர்தல்: நாங்கள் ஏற்கனவே தோற்றுவிட்டோம்… காங்கிரஸ் தலைவர் சொன்ன கருத்தால் மோதல்

Read Time:4 Minute, 20 Second

டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 62 தொகுதிகளை கைப்பற்றி வெற்றியை பதிவு செய்தது. பா.ஜனதா 8 இடங்களை வென்றது.

காங்கிரஸ் கட்சியோ படுதோல்வியை தழுவியது. அக்கட்சியின் 63 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். 2015 தேர்தலில் 9.7 சதவீத வாக்கை பெற்ற காங்கிரஸ் இத்தேர்தலில் வெறும் 4.26 சதவீத வாக்கைதான் பெற்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவினாலும், பா.ஜனதா வெற்றியடையாததற்கு அக்கட்சியினருக்கு திருப்தியை வழங்கியது. தேர்தல் முடிவுகள் வெளியான போது அரசியல் கட்சி தலைவர்கள் ஆம் ஆத்மியின் வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ப. சிதம்பரம் தனது டுவிட்டரில், டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றியடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவைத் தோற்கடித்துள்ளனர். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஷர்மிஸ்தா முகர்ஜி கண்டனத்தை பதிவு செய்தார். ப.சிதம்பரம் டுவிட்டை இணைத்து அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், டெல்லி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆனால், நீங்களோ ஆம் ஆத்மி வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

தங்களுக்கு தகுந்த மரியாதையை உரித்தாக்கி ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். காங்கிரஸ் ஒருவேளை பாஜகவை தோற்கடிக்க மாநிலக் கட்சிகளை அவுட்சோர்ஸிங் முறையில் நியமித்துள்ளதா? அப்படியில்லை என்றால் எதற்காக நம் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் ஆம் ஆத்மியைக் கொண்டாட வேண்டும்? ஒருவேளை என் கேள்விக்கு பதில் ஆம் என்றால் நாம் ஏன் கட்சியை மூடிவிட்டுச் செல்லக்கூடாது!” என்று பதிவிட்டார்.


இந்த மோதல் ஒருபக்கம் போக காங்கிரஸ் மூத்த தலைவர் சாக்கோ டெல்லி தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்ததார்.

அப்போது டெல்லியில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோதே காங்கிரஸ் தோல்வியை தழுவி உள்ளது என அவர் கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்து உள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சாக்கோ கூறுகையில், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலத்திலேயே காங்கிரஸ் தோற்று இருப்பதாக நான் கூறவில்லை.

வேண்டுமென்றே என் மீது அவதூறு கிளப்பப்படுகிறது. காங்கிரஸில் உள்ள ஒரு சிலர் திட்டமிட்டே எனக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். 2013-ம் ஆண்டு மட்டுமல்ல காங்கிரஸ் 2014, 2015, 2017 என பல தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளது. என கூறியுள்ளார்.