பா.ஜனதாவை விமர்சிப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு காங்கிரசார் கோபம்…!

Read Time:3 Minute, 29 Second

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 8-ம் தேதி தேர்தல் நடந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், “ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று உள்ளது. ஏமாற்று வேலை மற்றும் வெற்று கோஷம் தோல்வி அடைந்து உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லியில் வாழும் மக்கள், பா.ஜனதாவின் ஆபத்து மிகுந்த பிரித்தாளும் சூழ்ச்சி மற்றும் வகுப்புவாத அரசியல் திட்டங்களை தோற்கடித்து உள்ளனர்.

மேலும் வருகிற 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ள டெல்லி மக்களை நான் வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.


மேலும் ‘டெல்லி ஒரு மினி இந்தியா என்பதால் அம்மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு ஒப்பானது’ எனவும் தெரிவித்துள்ளார்.

டெல்லி தேர்தலில் பா.ஜனதா தோல்வியை தழுவினாலும் 38 சதவீத வாக்குகளைப்பெற்றுவிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ படுதோல்வியை சந்தித்தது. கடந்த தேர்தலில் 9.7 சதவீதம் வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் இம்முறை 4.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இதற்கிடையே சொந்த கட்சியையே ப.சிதம்பரம் விமர்சனம் செய்கிறார் என்ற கேலிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது காங்கிரசார் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, ப. சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் செய்தியை பதிவிட்டு கேள்வியொன்றை எழுப்பியுள்ளார். அதில், பா.ஜனதாவை வீழ்த்தும் பணி மாநில கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டு உள்ளதா? என பணிவுடன் அறிந்து கொள்ள விரும்புகிறேன். அப்படி இல்லை எனில், நமது தோல்வியை பற்றி கவலை கொள்ளாமல் ஆம் ஆத்மி வெற்றியை ஏன் நாம் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும்? ஆம் எனில், நம்முடைய மாநில காங்கிரஸ் கட்சிகளை மூடி விடலாம் என தெரிவித்து உள்ளார்.