ஹபீஸ் சயீதுக்கு சிறை… பாகிஸ்தானின் பித்தலாட்டம் அம்பலம்…!

Read Time:4 Minute, 2 Second

பாகிஸ்தானில் அல்-கொய்தா, தலிபான், லஷ்கர், ஹக்கானி நெட்வோர்க், ஜெய்ஷ்-இ-முகமது என வரிசையாக அடுக்கும் வகையில் பயங்கரவாத அமைப்புகளும், அதனுடைய கிளை அமைப்புகளும் செயல்படுகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எனக்கூறி உலக நாடுகளிடம் வாங்கிய நிதி உதவி, ஆயுத உதவியை எல்லாம் இந்தியாவிற்கு எதிராகவே பயன்படுத்துகிறது. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்துவரும் பாகிஸ்தான், மறைமுகமான போரை நடத்துகிறது.

தற்போது பயங்கரவாதி ஹபீஸ் சயீதுக்கு சிறையென்பதில் பாகிஸ்தானின் பித்தலாட்டமும், அதன் பின்னால் இருக்கும் காரணமும் அம்பலமாகியுள்ளது.

யார் இந்த ஹபீஸ் சயீத்?

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தினர். உலகையே அதிர வைத்த இந்த தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத். மும்பை தாக்குதலை தொடர்ந்து அவனை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்தது. மேலும், நீதியின் முன் நிறுத்துவதற்கு அவரைப்பற்றிய தகவல்களை அளிப்போருக்கு 10 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.70 கோடி) பரிசு அளிக்கப்படும் எனவும் கூறியது. இருப்பினும் ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தான் எந்தஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பாகிஸ்தான் கோர்ட்டு சிறை

பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கியதாக இப்போது பாகிஸ்தான் கோர்ட்டு ஹபீஸ் சயீத்திற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது. ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது.

உண்மையில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கிறதா?

இந்த கேள்விக்கு ஹபீஸ் சயீத் 2018-ல் பாகிஸ்தானில் அரசியல் கட்சியை தொடங்கியதே சாட்சியாகும். பயங்கரவாதியான ஹபீஸ் சயீத் அங்கு அரசியல் கட்சியை தொடங்கியது மட்டுமல்லாது, அதனை பதிவு செய்யவும், தேர்தலில் போட்டியிடவும் முயற்சி செய்தான். இந்தியா, அமெரிக்காவின் நெருக்கடியினால் பாகிஸ்தான் அதனை கடைசியில் நிறுத்தியது.

பாகிஸ்தானின் பித்தலாட்டம்

மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என்று இந்திய அரசு குற்றம்சாட்டிய ஜக்கியுர் ரஹ்மான் லக்வியை ஏற்கனவே சிறையில் இருந்து பாகிஸ்தான் விடுவித்துவிட்டது. இதுவரையில் பாகிஸ்தான் எந்தஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்தது கிடையாது. அமெரிக்கா ஏற்கனவே பாகிஸ்தானுக்கான நிதியை நிறுத்திவிட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதி செல்லும் ஆதாரங்களை தடுக்காததால் பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் மீண்டும் சேர்க்க சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (எப்.ஏ.டி.எப்) முடிவெடுத்துள்ளது. அமைப்பின் கூட்டம் பாரீஸில் விரைவில் நடக்க உள்ள நிலையில் உலகை ஏமாற்றும் பித்தலாட்ட செயலில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.