சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Read Time:1 Minute, 56 Second

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது. உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் வேகமெடுத்துள்ளது என்பதை சீனாவிலிருந்து வெளியாகும் செய்திகள் காட்டுகின்றன.

வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பு எவ்வளவு?

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,355 ஆக உள்ளது. புதன் கிழமை மட்டும் 242 பேர் உயிரிழந்து உள்ளனர்.

எத்தனை பேருக்கு பாதிப்பு?

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60000 ஆக அதிகரித்து உள்ளது. 14,840 பேர் ஒரேநாளில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பில் எத்தனை பேர்?

இதைப்போல நோய் அறிகுறி கொண்ட 2 லட்சம் பேர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 5 லட்சம் பேரும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக சீன அரசு வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கும் முறையில் கொண்டுவந்த மாற்றம் என்ன?

சீன அரசு இதுவரையில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்து உறுதி செய்தது. தற்போது சிடி ஸ்கேன் மூலமாக பரிசோதனையை செய்து வருகிறது. நுரையீரலில் உள்ள பாதிப்பை கண்டறிந்து, அதன்படி பாதிப்பை கண்டுபிடிக்கும் நடைமுறையை கொண்டுவந்துள்ளது.