ஈரான் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் பாதிப்பு என அதிர்ச்சி தகவல்

Read Time:1 Minute, 56 Second

கடந்த மாதம் ஈராக்கில் அமெரிக்கப்படையினர் தங்கியிருந்த விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஈரானை தனிமைப்படுத்தி, அதன் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. ஈரானின் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நிலைக்கொண்டு உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிக்கும் பணிக்காக ஈராக் வந்து அமெரிக்க ராணுவம் பிஸ்மாயக், தாஜி, அல்-அசாத் விமானப்படை தளம், எர்பில் ஆகிய இடங்களில் தனது தளத்தை அமைத்து தங்கியது. இந்நிலையில், ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கடந்த மாதம் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது.

இதனையடுத்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் முற்றியது. அல்-அசாத் விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் அமெரிக்க வீரர்கள் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அமெரிக்க தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவருடைய உடல்நிலை தேறிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.