அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்பு; ‘பேபி மப்ளர்மேன்’, பொதுமக்களுக்கு மட்டுமே அழைப்பு

Read Time:3 Minute, 56 Second

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜனதா 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி, ஒரு இடத்தைக்கூட பிடிக்கவில்லை. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டசபை கட்சி தலைவராக (முதல்வராக) அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன் அடிப்படையில், அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால், வருகிற 16-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர் முதல்-மந்திரி ஆவது, இது தொடர்ந்து 3-வது தடவை ஆகும். டெல்லி ராமலீலா மைதானத்தில் பதவி ஏற்பு விழா, பிரமாண்டமாக நடக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுடன் எல்லா கேபினட் மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். பதவி ஏற்பு விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கெஜ்ரிவாலின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எந்த அரசியல் கட்சியின் தலைவர்களையும், மாநில முதல்வர்களையும் அழைக்கப் போவதில்லை என அந்த கட்சி தெரிவித்தது. பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும், மாநில முதல்வர்களையும் அழைக்கவில்லை என அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், கெஜ்ரிவால் போன்று மப்ளர் அணிந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அனைவரையும் கவர்ந்த மப்ளர் அணிந்த சிறுவனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் கூறுகையில், “டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பது டெல்லிக்கான குறிப்பிட்ட நிகழ்ச்சியாகும். இதில் எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், முதல்வர்களுக்கும் அழைப்பு இல்லை. கெஜ்ரிவால் தலைமை மீது நம்பிக்கை வைத்த மக்களுடன் சேர்ந்துதான் முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார்” என தெரிவித்தார்.

இதற்கிடையே தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திக்க ஒன்றரை வயது குழந்தையை கெஜ்ரிவால் போன்று தலையில் மப்ளர் அணிந்து, மீசை வரைந்து சிறிய கண்ணாடி அணிவித்து அழைத்து வந்திருந்தனர். சிறுவன் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்கள், மீடியாக்களை ஆக்கிரமித்தது. அவ்யன் தோமர் என்ற பெயர் கொண்ட அந்த குழந்தையுடன் ஆம்ஆத்மி தலைமை அலுவலகத்தில் நீண்ட நேரம் குழந்தையின் பெற்றோர் காத்திருந்தும் கெஜ்ரிவால் வரவில்லை.

இதனால், கெஜ்ரிவாலை சந்திக்க முடியாமல் குழந்தையின் பெற்றோர் வீடு திரும்பினர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தனது டுவிட்டர் தளத்தில் குழந்தைக்கு சிறப்பு அழைப்பு விடுத்து உள்ளது. “அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ம் தேதி முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு பேபிமப்ளர் மேன் அழைக்கப்பட்டு உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.