வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை… கெஜன் மோகனின் அதிரடி

Read Time:2 Minute, 9 Second

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் போன்றவற்றை வழங்குவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க ஜெகன் மோகனின் அரசு அதிரடியாக முடிவு செய்து உள்ளது.

ஆந்திர அமைச்சரவை கூட்டம் அமராவதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது தொடர்பாக அம்மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சர் நானி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலை வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சில மாற்றங்களை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் போன்றவற்றை வழங்கும் வேட்பாளர்கள் கையும் களவுமாக பிடிபட்டால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தலில் வெற்றிக்கு பிறகு இந்த முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் பதவி பறிக்கப்படும்.

மேலும் இந்த குற்றங்களுக்கான சிறை தண்டனை தற்போது 3 முதல் 6 மாதங்கள் வரை உள்ளது. இனி இந்த குற்றங்களுக்கான தண்டனை 3 ஆண்டுகளாக உயர்த்தப்படும் எனக் கூறியுள்ளார்.

அதேபோன்று கிராம பஞ்சாயத்து தலைவர் உள்ளூரில் வசிப்பதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. இயற்கை பேரழிவுகள் அல்லது பஞ்சம் ஏற்பட்டால் நிதிவழங்கல் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. வங்கி சாரா நிதி நிறுவனமான பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் அமைப்பதற்கும் ஆந்திரா ஒப்புதல் அளித்துள்ளது.