பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் காஷ்மீர் பற்றி பேசியது என்ன?

Read Time:5 Minute, 4 Second

துருக்கி நாட்டு பிரதமர் எர்டோகன் பாகிஸ்தானுக்கு இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உலகநாடுகள் பேசுவதற்கு இந்தியாவின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், துருக்கி அதிபர் எர்டோகன் வெள்ளிக்கிழமை மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியுள்ளார்.

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதில் முன்னேற்றம் இருக்காவிட்டால் பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என எப்ஏடிஎப் அமைப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தற்போது ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுப்பதாக நாடகம் ஆடுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய எர்டோகன், “பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியை தடுக்கும் அமைப்பான நிதிச்செயல் பணிக்குழு கூட்டங்களில் அரசியல் அழுத்தங்களுக்கு உட்பட்ட பாகிஸ்தானுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன், ”என்று கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா இறங்கும் என்ற நிலையில் அதனை காப்பாற்றும் விதமான பேச்சு துருக்கியிடம் இருந்து வந்துள்ளது.

ஏற்கனவே அக்டோபர் மாதம் அக்டோபரில் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு மலேசியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் சம்மதிக்கவில்லை. ஒரு நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதற்கு 3 நாடுகள் ஆதரவு இருந்தால் போதுமானதாகும். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் ஆதரவு இருந்ததால், கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படாமல் கடும் எச்சரிக்கையுடன் விடப்பட்டது. தற்போதும் அதே நிலையே காணப்படுகிறது.

காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு துருக்கியின் ஆதரவு எப்போதும் உள்ளது எனக் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூறியுள்ள எர்டோகன், நமது காஷ்மீர் சகோதர சகோதரிகள் பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்டு உள்ளனர், சமீபத்திய காலங்களில் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இந்த துன்பங்கள் மோசமாகிவிட்டன. இன்று காஷ்மீர் பிரச்சினை உங்களிடம் இருப்பதை போலவே எங்களுக்கும் நெருக்கமாக உள்ளது. இதில் நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையிலான தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களுக்கும் உதவும். காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் துருக்கி நீதி, அமைதி மற்றும் உரையாடலுடன் தொடர்ந்து துணை நிற்கும் எனக் கூறியுள்ளார்.

காஷ்மீரிகளின் போராட்டத்தை முதலாம் உலகப்போரில் வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான துருக்கியின் போராட்டத்துடன் ஒப்பிட்ட எர்டோகன், துருக்கி ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பும் எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், எர்டோகன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் உரையாற்றியபோது காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். ஐ.நா.வில் அவர் கூறிய கருத்துக்களுக்கு இந்தியா பதில் அளிக்கையில், காஷ்மீர் பிரச்சினையில் துருக்கியின் கூற்றுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும், இது ஒரு உள் விஷயம் எனக் கூறியது. காஷ்மீர் விவகாரத்தில் மேலதிக கருத்துக்களை தெரிவிப்பதற்கு முன்னர் காஷ்மீரின் நிலைமை குறித்து முறையான புரிதல் பெற வேண்டும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் துருக்கிக்கு பதில் அளித்தார். ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஸ்திரமாக கூறிவரும் இந்தியா, ஐ.நா. அல்லது அமெரிக்கா உட்பட எந்தவொரு நாட்டுடனும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை நிராகரித்து வருகிறது, இது பாகிஸ்தானுடனான இருதரப்பு பிரச்சினை எனவும் கூறியது.