இந்திய விமானப்படையில் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் புதிய ‘ரோபோ’

Read Time:3 Minute, 10 Second

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்படும் வெடிகுண்டுகள் மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய பகுதிக்குள் விழும் குண்டுகளை இந்திய ராணுவம் செயல் இழக்க செய்கிறது. இப்படி செயல் இழக்கச் செய்யும்போது வீரர்கள் காயம் அடைவது, உயிரிழப்பது போன்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் நடக்கிறது.

பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட்டில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை அழித்தது. அப்போது, இருதரப்பு விமானப்படைகள் இடையே மோதல் வெடித்தது.

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் ராணுவ நிலைகளில் குண்டுகளை வீசியது. ஆனால், வெடிக்கவில்லை. இதனையடுத்து இவற்றை செயல் இழக்கச் செய்வதில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்ற எச்சரிக்கை எழுந்தது. மத்திய அரசு உள்நாட்டு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) 1000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் புதிய தொழில்நுட்பத்துடன் வெடிக்காத வெடி குண்டுகளை கையாளும் ரோபோக்களை (யு.எக்ஸ்.ஒ.ஆர்.) தயாரித்து, பரிசோதனை செய்து வெற்றிக்கண்டது.

இதனால் வீரர்கள் வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்கலாம். இந்த ரோபோக்கள் வரும் காலங்களில் ஒரு முக்கியமான கருவியாக மாறும் என்று விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. காஷ்மீரில் கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தான் வீசிய குண்டுகளை செயல் இழக்கச் செய்ய டி.ஆர்.டி.ஓ.வின் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இந்த ரோபோக்கள் அதிகாரப்பூர்வமாக இந்திய விமானப்படையில் இணைக்கப்படவில்லை.

இந்த ரோபோக்களை ‘ரிமோட்’ மூலம் எளிதாக இயக்கலாம். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலிருந்தபடியே கட்டுப்படுத்தலாம். ரோபோக்களால் வெடிப்பொருட்களை கண்டுபிடிக்க முடியும். இயக்குபவர் உயர்அழுத்த நீர் ஜெட்டை பயன்படுத்தி அதனை செயல் இழக்கச் செய்ய முடியும். லக்னோவில் நடைபெற்ற 11-வது ராணுவ கண்காட்சியில் இந்த ரோபோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ரோபோக்கள் வாங்குவதற்கான நடவடிக்கையில் இந்திய விமானப்படை இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.