‘கனவு நனவாகி இருக்கிறது…’ இந்திய வீராங்கனை பாவனா ஜாட் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

Read Time:2 Minute, 53 Second

7-வது தேசிய நடைப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

இதில், பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் 23 வயதான ராஜஸ்தான் வீராங்கனை பாவனா ஜாட் 1 மணி 29 நிமிடம் 54 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்து தங்கம் வென்றார். மேலும், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற 1 மணி 30 நிமிடத்துக்குள் 20 கிலோ மீட்டரை கடக்க வேண்டியது அவசியமானது. இதற்கு முன்பு 2018-ம் ஆண்டில் டெல்லி வீராங்கனை சவும்யா 1 மணி 31 நிமிடம் 29 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பாவனா ஜாட் முறியடித்து உள்ளார். கொல்கத்தாவில் ரெயில்வே டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வரும் பாவனா ஜாட் தொலைதூர கல்வி வாயிலாக மேற்படிப்பை படித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேசிய ஓபன் தடகள போட்டியில் 1 மணி 38 நிமிடம் 30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே முந்தைய அவரது சிறந்த செயல்பாடாக இருந்தது.

ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்த பாவனா ஜாட் கூறுகையில் ‘ஒலிம்பிக் போட்டியில் கால்பதிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு நனவாகி இருக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.

பயிற்சியின் போது நான் ஏறக்குறைய 1 மணி 27 நிமிடத்துக்குள் பந்தய தூரத்தை கடந்து இருக்கிறேன். சூழ்நிலை சரியாக அமைந்தால் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கை எட்ட முடியும் என்பது எனக்கு தெரியும். கடந்த சில மாதங்களாக பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் படி கடுமையாக பயிற்சி மேற்கொண்டதன் பலனாக இந்த மாதிரியான திறமையை என்னால் வெளிப்படுத்த முடிந்தது.

என்னுடைய அப்பா, அம்மா மற்றும் இந்தியன் ரெயிவேக்கு மிக்க நன்றி என பாவனா ஜாட் கூறியுள்ளார்.