‘ஏ.ஆர். ரகுமான் மகளை பார்க்கும் போது எல்லாம்…’ தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சை கருத்து

Read Time:7 Minute, 21 Second

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா முகத்தை மறைத்து பர்தா அணிவது ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் விவாதப்பொருளாகி உள்ளது.

2019 பிப்ரவரியில் மும்பையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா முகத்தை மறைத்து பர்தா அணிந்து பேசினார். இதை பார்த்த சிலர் ஏ.ஆர்.ரகுமான் இரட்டை வேடம் போடுவதாகவும் மகளை கட்டாயப்படுத்தி பர்தா அணிய வைத்துள்ளதாகவும் வலைத்தளத்தில் விமர்சனம் செய்தனர். இதை தொடர்ந்து முகத்தை மறைக்காமல் தலையில் முக்காடு மட்டும் போட்டுள்ள மனைவி, முக்காடு அணியாத மகள் ரஜிமா, பர்தா அணிந்த மகள் கதிஜா ஆகியோர் படங்களை ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் வெளியிட்டு உடைகள் அணிவது அவர்கள் விருப்பம் என்று தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா, “என் தந்தையுடன் மேடையில் கலந்து கொண்டபோது நான் அணிந்த ஆடை பற்றி பேசப்படுகிறது. நான் அணியும் ஆடை மற்றும் வாழ்க்கை முறைகளுக்கும் எனது பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் முழுமையாக ஏற்றுக்கொண்டு எனது சொந்த விருப்பத்தின் பேரில்தான் பர்தாவை அணிந்து இருக்கிறேன். வாழ்க்கையில் எது வேண்டும்? என்று தேர்வு செய்யும் அளவுக்கு எனக்கு பக்குவம் இருக்கிறது.

எந்த தனி மனிதனுக்கும் எந்த உடை அணிய வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? என்ற சுதந்திரம் இருக்கிறது. அந்த சுதந்திரத்தை நானும் அனுபவித்து வருகிறேன். உண்மை நிலை தெரியாமல் பேச வேண்டாம்.” என்று கூறியிருந்தார்.

மீண்டும் சர்ச்சை

தற்போது சரியாக ஓராண்டுகள் கழித்து மீண்டும் கதிஜாவின் ஆடை சமூக வலைதள விவாதத்திற்கு சிக்கியுள்ளது. தற்போது இந்த விவாதத்தை தொடங்கி வைத்துள்ளவர் வங்கதேச எழுத்தாளர் நஸ்லிமா நஸ்ரின்.

அவர் டுவிட்டரில் ஏ.ஆர். ரகுமானின் புகைப்படத்தை பதிவிட்டு, “நான் ஏ.ஆர். ரகுமானின் இசையை முற்றிலும் நேசிக்கிறேன். ஆனால் அவரது அன்பான மகளை நான் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒடுக்கப்படுவதாக ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஒரு கலாச்சார குடும்பத்தில் படித்த பெண்கள் கூட மிக எளிதாக மூளை சலவை செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் வருத்தமளிக்கிறது…!” எனக் குறிப்பிட்டார். அவருடைய டுவிட்டருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பலரும் பதில் டுவிட் செய்து வருகின்றனர். சிலர் நஸ்லிமாவின் டுவிட்டை விமர்சனம் செய்து வருகின்றனர்.

கதிஜா பதில்

தஸ்லிமா நஸ்ரின் டுவிட் பதிவு வைரலாகிய நிலையில், கதிஜா இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார்.

தஸ்லிமா நஸ்ரினின் டுவிட் பதிவின் ஸ்கிரின் ஷார்ட்டை இணைத்து கதிஜா வெளியிட்டுள்ள மிக நீண்ட பதிவில், “ஒரு வருடம் கழித்து மீண்டும் இவ்விவகாரம் சுற்ற தொடங்கியுள்ளது. நாட்டில் எவ்வளவோ நடக்கிறது. ஆனால், ஒரு பெண் அணிய விரும்பும் உடையை பற்றி எல்லா மக்களும் கவலைப்படுகிறார்கள். நான் மிகவும் ஆச்சர்யப்படுகிறேன். இந்த செய்தி வரும்போது என்னுடைய கோபத்திற்கு தீயை மூட்டுகிறது, நிறைய விஷயங்களை சொல்ல விரும்புகிறது. கடந்த ஒரு வருடத்தில், பல ஆண்டுகளில் நான் காணாத வித்தியாசமான சம்பவங்களை கண்டேன். என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய தேர்வுகளுக்கு வருத்தப்பட மாட்டேன். நான் என்ன செய்கிறேன் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன், நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நன்றி. கடவுளின் விருப்பப்படி என்னுடைய பேச்சு இருக்கும். நான் மேலும் பேசுவதற்கு விரும்பவில்லை. என்னுடைய தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் அதனைதான் செய்கிறேன். அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின் அவர்களே, என்னுடைய உடையால் ஒடுக்கப்பட்டதாக உணர்ந்தால் மன்னிக்கவும். தயவுசெய்து கொஞ்சம் புதிய காற்றை பெறுங்கள், எனக்கு ஒடுக்கப்பட்டதாக எந்தஒரு உணர்வும் கிடையாது, மாறாக நான் பெருமைப்படுகிறேன். என்னுடைய நிலைக்கு நான் அதிகாரம் அளிக்கிறேன். உண்மையான பெண்ணியம் என்றால் என்ன? என்பதை நீங்கள் கூகிள் தேட பரிந்துரைக்கிறேன், ஏனென்றால் அது மற்ற பெண்களை வீழ்த்துவதோ அல்லது அவர்களின் தந்தையர்களை பிரச்சினையில் கொண்டு வருவதோ இல்லை. உங்கள் ஆய்வுக்காக எனது புகைப்படங்களை உங்களுக்கு அனுப்பியதையும் நான் நினைவுபடுத்தவில்லை,” என பதிவிட்டுள்ளார்.

தஸ்லிமாவின் டுவீட்டுக்கு பொருத்தமான பதிலை வழங்கியதற்காக கதிஜாவை பாராட்டும் விதமாக இன்ஸ்டாகிராமில் பலர் பதிலை பகிர்ந்துள்ளனர்.