‘கெஜ்ரிவாலால் டெல்லியின் வருவாய் உயர்வு,’ மீண்டும் காங்கிரசில் மோதல் வெடித்தது…!

Read Time:3 Minute, 28 Second

டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றியை ப.சிதம்பரம் புகழ்ந்ததை பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். கெஜ்ரிவால் வெற்றி விவகாரத்தில் டெல்லி காங்கிரஸ் விமர்சனங்களை முன்வைக்கிறது. ஆனால், பிற மாநில காங்கிரஸ் தலைவர்கள் கெஜ்ரிவாலை பாராட்டுகிறார்கள். இந்நிலையில் மேலும் ஒரு மோதல் காங்கிரசில் வெடித்து உள்ளது. மும்பை காங்கிரஸின் முன்னாள் தலைவர் மிலிந்த் தியோரா அரவிந்த் கெஜ்ரிவாலை பாராட்டி டுவிட்டரில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டார்.

அதில், “ அதிகம் அறியப்படாத மற்றும் வரவேற்கக்கூடிய உண்மையை பகிர்கிறேன். டெல்லி அரசு கடந்த 5 ஆண்டுகளில் மாநில வருவாயை இரட்டிப்பாக பெருக்கி வருவாய் உபரியையும் பராமரித்து வருகிறது. சிந்தனைக்கான விஷயம்: டெல்லி தற்போது இந்தியாவிலேயே முன்எச்சரிக்கையான விவேகமான மாநிலமாக திகழ்கிறது” என்று பதிவிட்டார். தியோரா இந்த கருத்து காங்கிரசிலிருந்து விமர்சனங்களை சம்பாதித்தது.

காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் காட்டமாக “சகோதரா, காங்கிரசை விட்டு விலக முடிவெடுத்தால் தயவு செய்து செய்யுங்கள், பிறகு அரைகுறை உண்மைகளை பரப்புங்கள்” என்றார். மேலும், டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியின் வருவாய் உருவாக்கத்தை பட்டியலிட்டார். அதில், 2013-14-ல் ரூ.37,459 கோடி, அதாவது 14.87% வளர்ச்சி, இது ரூ.60,000 கோடியாக அதிகரித்தது என்றாலும் வளர்ச்சி விகிதம் 9.90% தான், எனவே குறைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படும் முன்னாள் சாந்த்னி சவுக் எம்.எல்.ஏ அல்கா லாம்பாவும் (ஆம் ஆத்மியிலிருந்து காங்கிரசிற்கு சென்று தற்போதைய தேர்தலில் தோல்வியை தழுவியவர்.) தியோராவை விமர்சிக்கும் போது, “காங்கிரஸ் கட்சியில் தந்தையின் பெயரால் இணைந்தவர், அரசியல் வம்சாவளி காரணமாக தேர்தலில் போட்டியிட இடம் பெற்றவர், பிறகு தலைமையில் கட்சி தோற்றது. இப்போது கட்சிக்காக போராட வேண்டிய நேரத்தில், கிதார் வாசியுங்கள்” என்று கடுமையாக சாடினார்.

இதற்கிடையே மற்றொரு காங்கிரஸ் தலைவர் ராதிகா கேரா, “முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு ஒரு மூத்த தலைவரிடமிருந்து ஏமாற்றமே எஞ்சுகிறது. நம் கட்சியை ஊக்குவிப்பதை விடுத்து ஆம் ஆத்மியை ஆதரிக்கின்றனர். சிந்தனைக்கு ஒரு விஷயம்- 1994 முதலே டெல்லி வருவாய் அதிகரிக்கும் மாநிலமாகவே உள்ளது, 2011-ல் ஷீலாஜியின் ஆட்சியில் உச்சம் சென்றது” என்றார். இவ்விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் இடையே கடுமையான மோதல் தொடர்ந்து வருகிறது.