இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர்கள் கைதில் தமிழகம் முதலிடம்…! பரபரப்பு தகவல்கள்

Read Time:4 Minute, 45 Second

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என இந்தியா முழுவதும் பலரை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். பயங்கரவாத நெட்வோர்க் தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணையை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விகுக்கு மத்திய அரசு பதில் தெரிவித்து உள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என 2014 மே முதல் 2019 டிசம்பர் வரையில்
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) 177 பேரை கைது செய்துள்ளது. தி நியுஸ் மினிட் செய்தி இணையதளம் ஆர்.டி.ஐ. மூலம் கேட்டிருந்த கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பிப்ரவரி 13-ம் தேதி பதில் அளித்து உள்ளது. ஐ.எஸ் உறுப்பினர்கள் அல்லது அனுதாபிகளின் என அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளது தமிழகத்தில் தான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது. இந்த பட்டியலில் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது, அங்கு 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
இதற்கு அடுத்த இடங்களில் உத்தரப்பிரதேசம் (25), கேரளா (19), தெலுங்கானா (17), ஜம்மு-காஷ்மீர் (11) மாநிலங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கான காரணம், 2019-ம் ஆண்டில் தேசிய புலனாய்வு பிரிவு மேற்கொண்ட தொடர் கைது நடவடிக்கையாகும்.

சமூக ஊடகங்களில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவு பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக 2019 ஜூன் மாதம் கோயம்புத்தூரில் பல இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. அவர்களிடம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் தாக்குதல்களை நடத்த ஆட்களை நியமிக்கும் எண்ணம் இருந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த நேரத்தில் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இலங்கையில் 2019 ஈஸ்டர் குண்டு குண்டுவெடிப்பின் சூத்திரதாரி பேஸ்புக் நண்பர் என்றும் என்ஐஏ கண்டறிந்தது. அப்போது 16 பேர் தமிழ்நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 33 வயதான முகமது அசாருதீன் மற்றும் 38 வயதான சேக் கைதயத்துல்லா ஆகியோருக்கு எதிராக 2019 டிசம்பரில் தேசிய புலனாய்வு பிரிவு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தமிழ்நாட்டை சேர்ந்த இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத சித்தாந்தத்தை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. “கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக இளைஞர்களை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ப்பதற்கான நோக்கத்துடன் செயல்பட்டு உள்ளனர்” என குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் அனுதாபிகள் கைது அதிகமாக உள்ள மாநிலம் கேரளா என்ற பரவலான கூற்றை மத்திய அரசின் பதில் மறுக்க செய்து உள்ளது. ஐ.எஸ். தொடர்பான வழக்குகள் அதிக எண்ணிக்கையில் கேரள மாநிலத்தில் இருந்து வருவதாக Observer Research Foundation ஆய்வு முடிகள் தெரிவித்து உள்ளன. தென் மாநிலமான கேரளாவில் இந்தியா முழுவதிலும் ஐ.எஸ். சார்பு வழக்குகள் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது, 180 முதல் 200 வழக்குகளில் 40 வழக்குகள் அங்கு உள்ளன என தெரிவித்து உள்ளது.