இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி அடிப்படையில் (எஸ்.எஸ்.சி. கமிஷன்) தேர்வு செய்யப்பட்டு பெண் அதிகாரிகளாக இருப்பவர்கள், 10 ஆண்டுகள் அந்த பதவியில் இருக்க முடியும். மேலும் 4 ஆண்டுகள் அவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்க விதிமுறை உள்ளது. இந்தநிலையில் ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவிகள் அளிக்கப்படுவது இல்லை என்றும், ஆண் அதிகாரிகளை போல் பெண் அதிகாரிகளுக்கும் உயர் பதவி வழங்க வேண்டும் என்றும் 1993-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் சேர்ந்த 332 பெண்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆண் அதிகாரிகளை போல் பெண் அதிகாரிகளையும், ஓய்வு பெறும் வயது (60 வயது) வரை பணி புரிய அனுமதிக்கும் வகையில் (பெர்மனென்ட் கமிஷன்) தேர்வு செய்ய வேண்டும் என்றும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில், ராணுவத்தில் கட்டளை பிறப்பிக்கும் பணியில் பெண் அதிகாரிகளை நியமிப்பதில் உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சில பிரச்சினைகள், தடைகள் இருப்பதாக வாதிடப்பட்டது. அதாவது, ஆண்களை விட பெண்கள் வலிமை குறைந்தவர்கள் என்றும், பெண்களின் தலைமையை சில ஆண்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், மேலும் பெண்களுக்கு குடும்ப பொறுப்பு, பிரசவ கால விடுப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளன என்றும் வாதிடப்பட்டது.
ஆனால், மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், இந்திய அரசிலமைப்பு சட்டத்தின்படி ஆண்-பெண் பாகுபாடு இன்றி அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்றும், எனவே ராணுவத்தில் உயர் பதவியில் பெண்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இந்த வழக்கில் பிப்ரவரி 17-ம் தேதி உத்தரவி பிறப்பித்த நீதிமன்றம், ராணுவத்தில் ஆண் அதிகாரிகளைப் போல் பெண் அதிகாரிகளும் ஓய்வு பெறும் வயதை அடையும் வரை பணி புரிய அனுமதிக்க வேண்டும். உயர் பதவி வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அப்படி இருந்தும் அந்த உத்தரவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக அக்கறை காட்டவில்லை.
ஓய்வு பெறும் வயது வரை பெண் அதிகாரிகளை பணி செய்ய அனுமதிப்பதில் உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சில தடைகள் இருப்பதாக மத்திய அரசு கூறும் வாதம் அரசியல் சாசனம் வழங்கி உள்ள சமத்துவத்துக்கு எதிரானது என்பதால் அதை ஏற்க முடியாது. ஆண்களை போல் பெண்களும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். ராணுவத்தில் பெண் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி பதக்கங்களையும், விருதுகளையும் பெற்று இருக்கிறார்கள். தங்கள் சிறந்த பங்களிப்புக்காக ஐ.நா. அமைதிப்படை விருதையும் பெற்று நாட்டுக்கு பெருமை தேடித்தந்து இருக்கிறார்கள். நாட்டில் சில கடுமையான சூழ்நிலைகளில் கூட பெண்கள் தங்கள் வலிமையை நிரூபித்து உள்ளனர்.
இந்திய ராணுவத்தில் ஆண்-பெண் அதிகாரிகளுக்கு இடையே பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதற்கு அரசு முடிவு கட்ட வேண்டும். இந்த விஷயத்தில் கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வரும் மனப்போக்கில் மாற்றம் ஏற்படவேண்டும். ஆண் அதிகாரிகளைப்போல் பெண் அதிகாரிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும். உடலியல் சார்ந்த விஷயங்களை வைத்து அவர்களின் வலிமையை நிர்ணயிக்க முடியாது.ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி வழங்க வேண்டும். 3 மாதங்களுக்குள் ராணுவத்தில் தகுதியான பெண்களை உயர் பதவியில் நியமிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.