குடியுரிமை திருத்தச் சட்டம், தமிழ்நாட்டில் பிறந்த எந்த இஸ்லாமியருக்கு பாதிப்பு? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

Read Time:2 Minute, 26 Second

தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தினால் எந்த ஒரு சிறுபான்மையினரும் பாதிக்கப்படமாட்டார்கள். இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பரப்பப்படும் அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம். இது தொடர்பாக தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கையை விடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தமிழக அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சட்டசபையிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதில் அளித்தார். திமுகவை கடுமையாக சாடினார்.

“தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை. குடியுரிமை சட்டத்தால் தமிழ்நாட்டில் பிறந்த எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை. சிஏஏ தவறான தகவலை பரப்பி திமுக அமைதியை குலைக்க முயற்சி செய்கிறது. குடியுரிமை சட்டம் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது எங்களிடம் கிடையாது. இச்சட்டத்தினால் யார் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்? என்பதை திமுக விளக்க வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து தவறான தகவல்களை திமுகவினர் பரப்புகிறார்கள்.,” எனக் கூறினார்.

இந்த சட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதால்தான் மற்ற மாநிலங்களில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறப்பட்டதற்கு பதிலளித்த முதலமைச்சர், குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தை வைத்து, மக்களிடம் தவறான தகவலை பரப்பி, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.