மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாபை இந்துவாக காட்ட நடந்த சதி…!

Read Time:3 Minute, 41 Second

2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் 26–ந் தேதி மும்பை நகரில் நுழைந்த பாகிஸ்தானின் லாகூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ–தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதிகள் 10 பேர் 3 நாட்கள் தொடர் தாக்குதல் நடத்தினர். இதில் 18 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் என்பவன் வழக்கு விசாரணைக்கு பிறகு 2012–ம் ஆண்டு தூக்கில் போடப்பட்டான்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன், லஷ்கர் இ–தொய்பா இணை நிறுவனரும், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜமாத் உத் தவா அரசியல் கட்சி தலைவருமான ஹபீஸ் சயீத். 9 ஆண்டுகளுக்கு பின்னர் அதாவது 2017-ம் ஆண்டு, 2008–ம் ஆண்டு மும்பை நகரில் தாக்குதல் நடத்தியது, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத குழுதான் என்று முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிம் உதவியுடன் அப்துல் கசாப்பை இந்துவாக காட்ட முயற்சி செய்த சதி வெளியாகியுள்ளது. மும்பை தாக்குதல் வழக்கை மும்பை முன்னாள் காவல்த்துறை ஆணையர் ராகேஷ் மரியா விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் ராகேஷ் ‘Let Me Say It Now’ (லெட் மீ சே இட் நவ்) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் மும்பை தாக்குதல் குற்றவாளியை இந்துவாக சித்தரித்து இந்து தீவிரவாதம் என பிரச்சாரம் செய்ய பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதி செய்ததை அவர் தனது புத்தகத்தி்ல் குறிப்பிட்டு உள்ளார்.

புத்தகத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- மும்பை தாக்குதலை நடத்தியது பெங்களூரு நகரை சேர்ந்த சமீர் சவுத்ரி என்ற ஓர் இந்து என்று திசை திருப்ப இந்த வழக்கின் குற்றச்சாட்டுக்கு ஆளான லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் முயற்சி செய்தது. இதற்காக சிறையில் இருந்த கசாப்பை அங்கேயே கொல்வதற்கு முயற்சி நடந்து உள்ளது. பாகிஸ்தான் உள்வு அமைப்பான ஐஎஸ்ஐ இதற்கான திட்டத்தை தீட்டியது.

மும்பை குண்டுவெடிப்பு சம்பவ குற்றவாளியும், பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பவருமான தாவூத் இப்ராஹிமுக்கு இந்த பணிய ஒதுக்கியது. இதனை செயல்படுத்த அந்த பயங்கரவாத அமைப்பு, இந்திய முகவரிகளுடன் கூடிய போலியான அடையாள அட்டைகளை உருவாக்கியது. ஒரு புகைப்படத்தில், கசாப்பின் வலது கையில் சிவப்பு நிற கயிறு கட்டப்பட்டு இருந்தது. அதன் மூலம் குற்றவாளியை இந்துவாக காட்ட முயற்சி நடந்தது.

இதன் மூலம் இந்து பயங்கரவாதம் என்று பிரச்சாரம் செய்யவும் ஐஎஸ்ஐ முயற்சி மேற்கொண்டது. இதன்படி நடந்திருந்தால் அஜ்மல் கசாப் உயிரிழந்து இருக்க கூடும். இந்த தாக்குதலை நடத்தியது இந்து தீவிரவாதிகள் செய்ததாக தகவல் பரப்பப்பட்டு இருக்கும். ஆனால், அது நடக்கவில்லை எனக் தெரிவித்துள்ளார்.