சட்டவிரோத சாப்ட்வேர்களை பயன்படுத்தி தட்கல் ரெயில் டிக்கெட் மோசடி, 60 ஏஜெண்டுகள் கைது

Read Time:4 Minute, 58 Second

அவசர பயணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தட்கல் முறையில், ரெயில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என தொடர்ந்து புகார் வந்த நிலையில். இதற்கான தடுப்பு நடவடிக்கையில் ரெயில்வே போலீஸ் ஈடுபட்டது.

இதில், சட்டவிரோதமாக சாப்ட்வேர்களை பயன்படுத்திய ஏஜெண்டுகள் ரெயில்வே முன் பதிவு டிக்கெட்களை முடக்கியது தெரியவந்தது. ஏஜெண்டுகள் பயன்படுத்திய சாப்ட்வேர்களால் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 1.48 நிமிடங்களுக்குள் டிக்கெட்களை முடக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் எளிதாக டிக்கெட் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் அருண்குமார் பேசுகையில், அவசர பயணத்திற்கு பயன்படும் தட்கல் முறையில் சட்டவிரோத சாப்ட்வேர்களை பயன்படுத்தி ஏஜெண்டுகள் பலர் தட்கல் டிக்கெட் எடுப்பதால், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் தீர்ந்து போய் விடுகிறது. இதனால் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கும் ‘ஏ.என்.எம்.எஸ்., எம்.ஏ.சி., ஜாக்குவார் ஆகிய சட்டவிரோத மென்பொருளை ஏஜெண்டுகள் பயன்படுத்தி IRCTC இணையதளத்தில் இருக்கும் லாகின் கேப்சா, புக்கிங்க் கேப்சா, வங்கி ஓடிபி ஆகியவற்றை எளிதாகக் கடந்து சென்று முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்தது தெரியவந்தது.

இதனால், பொதுமக்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில் பெரும் இடையூறு இருந்தது. பொதுவாக ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்ய பொதுமக்களுக்கு 2.55 நிமிடங்கள் ஆகும். ஆனால், இந்த சட்டவிரோத மென்பொருளைப் பயன்படுத்தி வெறும் 1.48 நிமிடங்களிலேயே ஏஜெண்டுகள் தக்கல் டிக்கெட் முன்பதிவு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ரெயில்வே போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில், தட்கல் முன்பதிவு நடைமுறையில் பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத சாப்ட்வேர்கள் கண்டறிந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடியில் ஈடுபட்ட 60 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இனி இதுபோன்ற சட்டவிரோத கும்பலால் ஒரு டிக்கெட்டைக் கூட முன்பதிவு செய்ய முடியாது. அதில் இருந்த அனைத்துப் பாதுகாப்புக் குறைபாடுகளும் களையப்பட்டுவிட்டன. எந்த மென்பொருளையும் பயன்படுத்த முடியாத வகையில் ஐஆர்சிடிசி இணையதளம் மாற்றப்பட்டுவிட்டது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கி, சட்டவிரோத மென்பொருட்களை பயன்படுத்தி ஆண்டுக்கு ரூ.50 கோடி முதல் 100 கோடி வரை தட்கல் டிக்கெட் எடுத்து கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. சட்டவிரோத மென்பொருட்கள் மூலம் நடந்து வந்த வர்த்தகம் கண்டுபிடிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளதால் இனி முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், இனி அவசர பயணத்திற்கான தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

தட்கல் டிக்கெட் மோசடியில் கைது செய்யப்பட்டவர்களில் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவனுக்கு பங்களாதேஷை தளமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷுடன் (JUMB) தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி மாதம், ரெயில்வே பாதுகாப்பு படை டி.ஜி பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இணையதள டிக்கெட் மோசடி முறியடிக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார். தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாப்ட்வேர்களை உருவாக்கியவர்கள் கைது செய்யப்பட்டதுடன், மோடியில் பயன்படுத்தப்பட்ட 300-க்கும் அதிகமான ஐ.டி.கள் பிளாக் செய்யப்பட்டது.