கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்து சொகுசுப் பஸ் மீது மோதி விபத்து: 19 பேர் உயிரிழப்பு

Read Time:3 Minute, 53 Second

சேலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்தும் கேரளாவில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் அவிநாசி அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இன்று (பிப்.20) அதிகாலை 3.30 மணியளவில் சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பஸ்சும் கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கிய பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்களும், சாலையில் சென்றவர்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்துவந்து தீயணைப்பு படை வீரர்களும் மீட்பு பணிகள் ஈடுபட்டனர்.

இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் 19 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனையிலும் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியதாக முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்று நேரில் பார்வையிட்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விபத்து குறித்து கேரள அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து ஒரு மீட்புக்குழு அனுப்பப்பட்டுள்ளது.

உடல்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படும். தற்போது மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் காயமடைந்தவர்களுக்குத் தேவையான முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.

கேரள மருத்துவ குழு

இந்தநிலையில் விபத்துக்குள்ளான பேருந்து கேரளாவை சேர்ந்தது என்பதால் இதுகுறித்து விவரங்களை கேரள முதல்-அமைச்சார் பினராயி விஜயன் கேட்டறிந்தார். மேலும் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை கேரளாவுக்கு அழைத்து வர உடனடியாக மருத்துவக்குழுக்களை அனுப்பி வைக்கவும் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாலக்காட்டில் இருந்து முதல் மருத்துவக்குழு அவிநாசிபுறப்பட்டது. இதற்கான நடவடிக்கையை பாலக்காடு மாவட்ட ஆட்சியர் எடுத்து உள்ளார். இதுமட்டுமின்றி பேருந்து விபத்து குறித்து விசாரணை நடத்தவும், உதவி பணியில் ஈடுபடவும் மாநில போக்குவரத்துறை அமைச்சர் சசிதரன் கேரள போக்குவரத்துக்கழக குழுவினரை தமிழகம் அனுப்பி வைத்துள்ளார். இந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

விபத்தில் லாரி டிரைவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.