கறுப்பு பட்டியல்: இம்ரானை நடுவழியில் விட்டுச்சென்ற சீனா…! இந்தியாவுக்கு ராஜ்யரீதியிலான வெற்றி…!

Read Time:5 Minute, 3 Second

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத நிதியுதவியை தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க, ஜி7 நாடுகளால் 1989-ல் உருவாக்கப்பட்டதுதான் எப்ஏடிஎப் எனப்படும் நிதி செயல் நடவடிக்கை அமைப்பாகும்.

பிரான்ஸின் பாரீஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த குழு, விதிமுறைகளை மீறும் நாடுகளை கறுப்பு பட்டியலில் சேர்த்து வருகிறது. கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் நாடுகள் சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியனிடமிருந்து நிதியுதவி பெறுவது சிரமம் ஆகும். பயங்கரவாத செயலுக்கு நிதியுதவி செய்து வரும் பாகிஸ்தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எப்ஏடிஎப் கருப்பு பட்டியலுக்கு முந்தைய கிரே பட்டியலில் சேர்க்கப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத நிதியுதவியை தடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால்தான் இதிலிருந்து நீக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த அக்டோபரில் எப்ஏடிஎப் கூட்டம் நடைபெற்ற போது, பாகிஸ்தான் நாங்கள் நடவடிக்கையை எடுத்ததாக அமைப்பிடம் கூறியது. ஆனால், எப்ஏடிஎப் அமைப்பு நிர்ணயித்த 27 விதிமுறைகளில் 5 விதிமுறைகளை மட்டுமே பாகிஸ்தான் கடைப்பிடித்தது தெரியவந்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை, பண உதவியை தடுத்தல், பயங்கரவாத முகாம்களை அழித்தல், கைது செய்தல் போன்றவற்றை அடுத்த 4 மாதங்களுக்குள் பாகிஸ்தான் தீவிரப்படுத்த வேண்டும் என எச்சரிக்கப்பட்டது.

பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு மலேசியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் சம்மதிக்கவில்லை. ஒரு நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதற்கு 3 நாடுகள் ஆதரவு இருந்தால் போதுமானதாகும். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் ஆதரவு இருந்ததால், கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படாமல் கடும் எச்சரிக்கையுடன் விடப்பட்டது. பாகிஸ்தானுக்கான காலக்கெடு இந்த பிப்ரவரியுடன் முடிகிறது.

இந்நிலையில் எப்ஏடிஎப் கூட்டம் பாரீஸில் நடைபெற்று வருகிறது. கிரே பட்டியலில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என பாகிஸ்தான் பணியாற்றியது. ஆனால், கருப்பு பட்டியலில் தள்ள இந்தியா முயற்சியை மேற்கொண்டது. பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் பட்டியலிட்டது. ஆனால், பலன் அந்நாட்டுக்கு கிடைக்கவில்லை என்பது தெரியவந்து உள்ளது. இதில் முக்கிய நடவடிக்கையாக பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாக பார்க்கப்பட்ட சீனா அந்நாட்டுக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எப்ஏடிஎப் கூட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வாக, சீனாவும் சவுதி அரேபியாவும் இந்தியாவுடன் இணைந்ததாக இந்திய தூதரக தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயங்கரவாத நிதியுதவி மற்றும் நிதி மோசடி நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்த தனது கடமைகளை முடிக்க பாகிஸ்தானுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது. அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் உயர் தலைவர்களையும் தண்டித்தல் மற்றும் வழக்கு விசாரிப்பது உள்பட கடுமையான விதிகளை ஜூன் மாதத்திற்கு பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பாகிஸ்தான் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவுகளை சந்திக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் துருக்கி மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இறுதிவரையில் இருந்துள்ளது. சீனாவின் நிலைப்பாட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எப்போதும் FATF-ல் பாகிஸ்தானை ஆதரிக்கும் சீனா, இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் நின்றுள்ளது என தெரியவந்துள்ளது.