இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து, நூலிழையில் உயிர் தப்பிய அனுபவம் – காஜல் அகர்வால் அதிர்ச்சி

Read Time:2 Minute, 8 Second

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2.

இதன் முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து கமல் – காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார்கள். சண்டைக்காட்சி என்பதால் பிரம்மாண்ட கிரேன் மூலம் விளக்குகள் அமைத்து படம் எடுக்கப்பட்டு வந்தது. இதில் நேற்று (பிப்ரவரி 19) கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிருஷ்ணா, மற்றும் ஊழியர்கள் மது, சந்திரன் பலியாகினர். இந்த விபத்தின்போது படப்பிடிப்பு தளத்திலிருந்த காஜல் அகர்வால் தனது மனநிலையை டுவீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “என்னுடன் பணியாற்றியவர்களின் எதிர்பாராத மரணம் எனக்கு தரும் மனவலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது உங்கள் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். தனிமையான இந்த தருணத்தில் கடவுள் அவர்களுக்கு வலிமையை தரட்டும்.


நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். ஒரு சில வினாடிகளில் உயிர் தப்பித்த நான் இந்த ட்வீட்டை பதிவேற்ற ஒரு நொடி மட்டுமே ஆனது. அந்த ஒரு தருணம். நன்றியுணர்வோடு இருக்கிறேன். நேரம் மற்றும் உயிரின் மதிப்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.