மங்கல வாழ்வருளும் மகா சிவராத்திரி… விரதம் இருக்கும் முறை…!

Read Time:6 Minute, 5 Second
Page Visited: 354
மங்கல வாழ்வருளும் மகா சிவராத்திரி…  விரதம் இருக்கும் முறை…!

சிவபெருமான் தன்னை வணங்குபவர்களின் மனதில் இருக்கும் தீய எண்ண கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கர்ம வினைக் கழிவுகளை அழிப்பவர். அவரை வழிபடுபவர்களின் வாழ்வில் நிலவும் நோய்கள், மனக் கவலைகள், வறுமை நிலை போன்றவற்றை அறவே அழிப்பவர். ஒருவர் தனது மூன்று பிறவியில் செய்த பாவங்களையும் அழிக்க வல்லவர் சிவபெருமான். சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருளாகும்.

சிவராத்திரியை ஒளிமயமான இரவு, இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கிறோம். ஒருவர் தன் வாழ்வின் வினைப்பயனை அழிக்க, எட்டு விதமான சிவ வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்கலாம் என சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதி அன்று வரும் மகா சிவராத்திரி விரதமாகும். பகலில் திரயோதசியும், இரவில் சதுர்த்தசி திதியும் கூடும், சிவராத்திரியானது மிக விசேஷமானதாகும். கவுரிசங்கர சம்மேளன சிவராத்திரி என்றும் இதை கூறுவர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்பட உள்ளது.

விரதம் இருக்கும் முறை

எல்லோருக்கும் மகா சிவராத்திரியில் விரதம் இருக்கும் பாக்கியம் கிடைக்காது.

‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, அந்த சிவனின் அருள் இருந்தால் மட்டுமே இந்த மகா சிவராத்திரி விரத வாய்ப்பு கிடைக்கும். வாழ்வில், ஒருமுறையேனும் மகாசிவராத்திரி விரதம் மேற்கொள்வதும் சிவாலயத்துக்கு சென்று விசேஷ பூஜையில் தரிசிப்பதும் இந்த நம் ஜென்மத்தின் அனைத்து பாவங்களையும் போக்கிவிடும். புண்ணியங்களை பெருக்கித் தரும் என்பது உறுதியாகும்.

விரதம் இருப்பவர்கள் சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப தூப ஆராதனை செய்து வழிபட வேண்டும். இதைத்தொடர்ந்து சிவன் கோயிலுக்கு சென்று முறையே தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம்.

அருகில் உள்ள சிவன் கோவில்களில் இரவில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் வழிபடலாம்.
பூஜையின் போது சிவாய நம என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனதில் நல்ல அதிர்வுகளை உண்டுபண்ணும். பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளை கொண்டு அர்ச்சனை செய்வது இன்னும் வீரியமாக்கும். நல்ல நல்ல பலன்களையெல்லாம் வழங்கும். இரவில் உறங்காமல், தூங்காமல் நான்கு வேளையும் பூஜை செய்து, பூஜைகளையும் கண்ணார தரிசித்து, மறுநாள் விடிந்ததும் நீராடி, சிவனாரை வழிபட்டு, சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், தயிர்சாதம் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, ஏழை-எளியவர்களுக்கு தங்களால் முடிந்த அன்னதானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்யலாம்.

சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம் என செய்ய சொல்கிறது சாஸ்திரம். நம்மால் முடிந்த தானங்களை செய்வோம்… சிவனருளைப் பெறுவோம். முழுமையாக விரதம் கடைப்பிடித்தால் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த தூசி போல் சாம்பலாகும்.

விரத பலன்கள்

மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன், சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அதோடு அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம், காமம், குரோதம், கோபம், பேராசை பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். வாழ்வில் செல்வம் வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர், அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %