பிரதமர் மோடியின் ‘விவசாயி ஆதரவு நிதி’ திட்டத்தை செயல்படுத்தாத ஒரே மாநிலம்…!

Read Time:5 Minute, 47 Second

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு கடந்த 2019 பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ‘பிரதமர் விவசாயி ஆதரவு நிதி’ திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள். நான்கு மாத கால இடைவெளியில் மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த 2019 பிப்ரவரி 24-ம் தேதி நடந்த பிரம்மாண்ட விழாவில் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் சுமார் 1.01 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் முதல் தவணையாக தலா ரூ.2,000 வீதம் ரூ.2,021 கோடி செலுத்தப்பட்டது. ஒவ்வொரு மாநிலமாக இத்திட்டத்தின் கீழ் இணைந்தது.

மேற்கு வங்கத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தில் இணைந்துள்ளன, இதுவரை 8.45 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். திட்டம் தொடங்கப்பட்டு ஒருவருடம் ஆகும் நிலையில் மத்திய அரசு பி.எம். கிஷான் மொபைல் செயலி சேவை PM-Kisan mobile App தொடங்கப்பட்டு உள்ளது.

மொபைல் போன் செயலியின் நோக்கம் திட்டத்தின் வரம்பை மேலும் விரிவுபடுத்துவதாகும். இந்த செயலி பயன்பாட்டின் மூலம் விவசாயிகள் தங்கள் நிதிவரவு நிலையை அறிந்து கொள்ளலாம், திட்டத்திற்கான தகுதி மற்றும் பிற தகவல்களை அறிந்து கொள்வதோடு அவர்களின் பெயரை சரிசெய்யவும் முடியும்.

டெல்லியில் மொபைல் செயலி சேவையை தொடங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங், விவசாயிகளின் வருமானத்தை 2022-க்குள் இரட்டிப்பாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் பிரதமர் கிசான் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

இத்திட்டத்திற்கு மேற்கு வங்காளத்தில் ஆளும் மம்தா பானர்ஜி அரசு மட்டும் இத்திட்டத்தை செயல்படுத்த இணக்கம் தெரிவிக்கவில்லை. திட்டம் தொடங்கி ஓராண்டாகியும் மம்தா அரசு இத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது திட்டத்தில் இணையுமாறு மம்தா அரசுக்கு மத்திய அரசு கோரிக்கையை விடுத்து உள்ளது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் இன்று (பிப் -24) ‘பிரதமர் விவசாயி ஆதரவு நிதி’ திட்டத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார்.

“இந்த திட்டத்தில் மேற்கு வங்காளம் இன்னும் சேரவில்லை. மாநிலத்தில் 70 லட்சம் விவசாயிகள் உள்ளனர். செயல்படுத்தப்பட்டால் சுமார் 4,000 கோடி ரூபாய் நன்மைகள் அம்மாநில விவசாயிகளுக்கு கிடைக்கும். ” என நரேந்திர சிங் கூறியுள்ளார்.

மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த 70 லட்சம் விவசாயிகளில், சுமார் 10 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்து உள்ளனர். மாநில அரசு இதுதொடர்பான தரவுகளை சரிபார்த்தால்தான் இந்த விவசாயிகளுக்கு நிதிவழங்கல் நன்மை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“இத்திட்டத்தின் கீழ் பண பலன் விவசாயிகளுக்கு உதவுவது மட்டுமல்லாமல் மாநில பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும்,” என்றும் நரேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரா, பீகார், சிக்கிம் போன்ற சில மாநிலங்கள் தங்கள் விவசாயிகளின் தரவை அங்கீகரிப்பதில் மெதுவாக செயல்படுவதாகவும், மத்திய அரசு அவர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தலை வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் 14 கோடி விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கமாகும். பி.எம்.கிசான் ஆன்-லைன் இணையதளத்தில் மொத்தம் 9.74 கோடி விவசாயிகளின் தரவுகளை மத்திய அரசு பெற்றுள்ளது. ஏற்கனவே, 8.45 கோடி விவசாயிகளுக்கு நிதிஉதவி வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகளின் தரவுகளில் சுமார் 85 சதவீதம் ஆதார் சரிபார்க்கப்பட்டுள்ளது, மீதமுள்ளவை விரைவில் முடிக்கப்படும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்து உள்ளார்.