திருமங்கையாழ்வார் சிலையை திருப்பி தரும்படி இந்தியா கோரிக்கை… பிரிட்டன் மியூசியம் விளக்கம்

Read Time:7 Minute, 41 Second

இந்தியாவில் திருடப்பட்ட புரதாண சிலைகள் பல உலக நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. இதனை மீட்பு நடவடிக்கையில் சிலை தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்படி திருடப்பட்ட இந்திய கலைப்பொருட்கள் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு மீட்டெடுக்கப்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளது. சமீபத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுண்ணாம்பால் செதுக்கப்பட்ட சிற்பம் மீட்கப்பட்டது. இச்சிற்பம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தது.
ஸ்காட்லாந்து யார்டின் கலை மற்றும் பழம்பொருட்கள் பிரிவு சம்பந்தப்பட்ட அமெரிக்க-இங்கிலாந்து விசாரணையை தொடர்ந்து, தமிழ்நாட்டில் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழக சிற்பமான ‘நவநீத கிருஷ்ணன்’ வெண்கலச் சிற்பம், இந்திய தூதரகத்திடம் இங்கிலாந்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் 1950-களில் கும்பகோணம் சௌந்தரராஜப் பெருமாள் கோவில் திருமங்கையாழ்வாரிம் வெண்கலச் சிலை ஒன்று லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்தது.

சிலை லண்டன் சென்றது எப்படி?

கும்பகோணம் சுந்தரப்பெருமாள் கோவில் கிராமத்தில் சௌந்தரராஜப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் இருந்த திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை மாற்றப்பட்டு பழமையான சிலை லண்டனில் உள்ள ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டிருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்டுபிடித்தது.

சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் தற்போது உள்ள திருமங்கை ஆழ்வாரின் உலோகச் சிலை பழமையானது இல்லையென கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கோவிலி இருந்த திருமங்கை ஆழ்வாரின் சிலையின் பழைய புகைப்படத்தையும் தற்போது உள்ள சிலையையும் ஒப்பிட்டு பார்த்தபோது வேறுபாடு தெரியவந்துள்ளது. பிறகு ஆராய்ந்ததில் ஏற்கனவே இருந்த சிலை மாற்றப்பட்டு தற்போது உள்ள சிலை வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

இந்த மோசடி 1967-க்கு முன்பாக நடந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 1967-ல் இந்த சிலை புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் உள்ள சிலையும் தற்போதுள்ள சிலையும் ஒன்றுதான். அதேபோல, 1957ல் எடுக்கப்பட்ட சிலையின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்த்தால், தற்போதுள்ள சிலை வேறு மாதிரியாக உள்ளது. ஆனால், அந்த புகைப்படத்தில் உள்ள சிலையும் லண்டன் அருங்காட்சியத்தில் உள்ள சிலையும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆகவே, 1957-67 காலகட்டத்தில் சிலை மாற்றப்பட்டிருக்கலாம் என சிலை தடுப்பு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிலையை தடுப்பதற்கான பணிகள் தீவிரமாக தொடங்கியது.

ஃப்ரென்ச் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் புதுச்சேரியில் உள்ள பழைய ஆவணங்களில் இருந்த புகைப்படங்கள் திருமங்கையாழ்வாரின் பழைய சிலையை அடையாளம் காண பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

கையில் கத்தியும் கேடயமும் கொண்டிருக்கும் திருமங்கையாழ்வாரின் சிலை 1967-ல் வாங்கப்பட்டதாக அருங்காட்சியகத்தின் இணையதளம் தெரிவிக்கிறது. இந்த சிலை 57.5 சென்டி மீட்டர் உயரம் கொண்டது.

அருங்காட்சியம் விளக்கம்

இந்நிலையில் தமிழ்நாட்டின் கோவிலில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் 15 ஆம் நூற்றாண்டின் வெண்கலச் சிலையை திருப்பி தருமாறு பிரிட்டன் அருங்காட்சியகத்திடம் இந்தியா முறையான வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அஷ்மோலியன் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் கோவிலில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் 15-ம் நூற்றாண்டின் வெண்கலச் சிலையை திருப்பி தருமாறு எங்களிடம் இந்தியா முறையான வேண்டுகோள் விடுத்துள்ளது. பாண்டிச்சேரியில் உள்ள IFP-EFEO இன்ஸ்டிடியூட்டின் ( Institut Francais de Pondichery and the Ecole francaise d’Extreme-Orient) புகைப்பட காப்பகங்களின் ஆராய்ச்சியில் 1957-ம் ஆண்டில் தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் அதே வெண்கலச் சிலை இருப்பதை காண முடிகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் சுயாதீன ஆராய்ச்சியாளர் ஒருவரால் பண்டைய சிலை இந்தியாவை சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்திய தூதரகத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சேகரிக்கப்பட்ட வெண்கலச் சிலைகளில் ஒன்று தமிழகத்தை சேர்ந்தது என்று அஷ்மோலியன் அருங்காட்சியகத்திற்கு அறிவிக்கப்பட்டது, இந்த ஆராய்ச்சியாளரால் IFP-EFEO (பாண்டிச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்) காப்பகம் மூலம் அடையாளம் காணப்பட்டது.

வெண்கலச் சிலைக்கு எதிராக எந்த கோரிக்கையும் இல்லை என்றாலும், பிரிட்டிஷ் மியூசியம் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இந்த விஷயத்தை இந்திய தூதரகத்துக்கு அதிகாரபூர்வமாக கொண்டு வந்தது. காவல்துறை ஆவணங்களில் உள்ள பதிவுகள் உட்பட மேலதிக தகவல்களை மியூசியம் கோரியது. இது பணியின் ஆதாரத்தை நிறுவ உதவும். சிற்பத்தை திருப்பி அனுப்புவது பற்றி மேலும் விவாதங்களை நடத்த வெளிப்படையாகவே நடந்துகொள்கிறோம்.

திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை சேகரிப்பில் எவ்வாறு வந்தது என்பதற்கான எந்த ஆதாரமும் தற்போது எங்களிடம் இல்லை. இந்தியத் தூதரகத்தின் ஆதரவோடு நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இது திருடப்பட்டதா? என்பதை ஆராய வேண்டும். 1967-ம் ஆண்டில் நல்ல நம்பிக்கையின்பேரில்தான் இச்சிலை ஒருவரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. திருமங்கை ஆழ்வாரின் இந்த சிலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தால் 1967-ம் ஆண்டில் சோதேபியின் ஏல இல்லத்திலிருந்து ஜே ஆர் பெல்மாண்ட் (1886-1981) என்ற சேகரிப்பாளரின் சேகரிப்பிலிருந்து வாங்கி வைக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.